பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமாகி இருக்கும் சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் பிறந்த இவர் சிறு வயதிலேயே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார். பின்னர் ஊட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்து அங்கே பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு மேடை நாடகங்களில் நடித்தார். மேலும், சிறு வயதிலிருந்து சினிமாவிற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற ஆசையும் இவருக்கு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இவரது அண்ணன் ஹரி ஒரு சினிமா தயாரிப்பாளரும் கூட.
கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் காப்பி ரைட்டர் வேலைக்கு சென்று விட்டார். அங்கே இயக்குனர் பரதன் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இவரின் அண்ணன் ஹரியை பரதன் அடிக்கடி பார்க்க வரும்போது அவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் மலையாளத்தில் பரதன் இயக்கிய ‘தகரா’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் பாலு மகேந்திரா இவருடைய ஆல்பத்தை பார்த்துவிட்டு இவரை வைத்து அழியாத கோலங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
பாலு மகேந்திரா கொடுத்த வாய்ப்பு :
அந்த படம் இயக்கும்போது பாலு மகேந்திரா பெரிய இயக்குனர் எல்லாம் கிடையாது. அவர் இயக்கிய இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதாபின் நடிப்பு பாலுமகேந்திராவிற்கு மிகவும் பிடித்துப் போக அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களிடம் இவரை சிபாரிசு செய்து நடிக்கவும் வைத்தார்.
ராதிகாவுடன் திருமணம் :
இவர் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்துகொண்டு இருக்கும் போதே நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவரையும் திருமணமான 22 ஆண்டுகளில் விவகாரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிக்கு கேயா என்ற மகளும் இருக்கிறார். அவரும் இவரை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
பிரதாப்பின் ஒரே மகள் :
இரண்டாம் மனைவியை பிரிந்த போதிலும் தன் மகளை பாசமாக பார்த்து வந்தார் பிரதாப் போத்தன். மேலும், அவரது மகள் கேயாவும் கலைத்துறையில் ஆர்வமிக்கவர். இவர் பல ஆலம்பம் பாடல்களை எழுதி பாடியோதோடு ஒரு பேண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அவரின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
பிரதாப்பின் இறப்பு :
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்லக் தர்பார் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இடையில் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்தார். இந்நிலையில் பிரதாப் போத்தன் கடந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.