விஜயகாந்த் சார் சொன்னதால் அமைதியானேன், ஆனா- மாநகர காவல் பட அனுபவம் பற்றி லியாகத் அலிகான் சொன்னது

0
243
- Advertisement -

விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ ரீ ரிலீஸ் குறித்து லியாகத் அலிகான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரீலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த மாநகர காவல் படம் கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜயகாந்த் உடன் சுமா ரங்கநாத், நாசர், லட்சுமி, ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை மறைந்த இயக்குனர் எம் தியாகராஜன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு சந்திர போஸ் இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தினுடைய உரிமையை ஏவிஎம் நிறுவனம் வாங்கி ரீ ரீலீஸ் செய்திருந்தது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக விஜயகாந்த் படங்களுக்கு வசனம் எழுதிய லியாகத் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், உண்மையில் மாநகர காவல் படம் நான் தான் இயக்க இருந்தது.

- Advertisement -

லியாகத் அலிகான் பேட்டி:

விஜயகாந்த் சாரும், ராவுத்தர் சாரும் என்னைத்தான் எடுக்க சொல்லி இருந்தார்கள். ஆனால் படத்தோட இயக்குனர் தியாகராஜனோட நண்பரால் என்னால் இந்த படத்தை இயக்க முடியவில்லை. இப்படி சில மறக்க முடியாத அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்து இருக்கிறது. ஏவிஎம் சரவணன் சார், ஒரு நாள் என்னை கூப்பிட்டு இந்த படத்தோட கதையை கேட்டுட்டு, நீங்கள் வசனம் எழுத ஆரம்பிக்கலாமே என்று கேட்டார். பின் நான் கதையை கேட்டேன். 1970களில் வர கதை மாதிரி அது இருந்தது. அதனால் அந்த கதை எனக்கு பிடிக்கவில்லை. அதை சரவணன் சார் இடம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

விஜயகாந்த் குறித்து சொன்னது:

உடனே அவர், என்னுடைய அப்பா காலத்தில் இருந்து நாங்க முதலில் கதையை தான் தேர்வு செய்வோம். அதன்பிறகு தான் அதனை இயக்கக்கூடிய இயக்குனரை முடிவெடுப்போம். நாங்கள் தேர்வு செய்திருக்கும் கதை பிடிக்கவில்லை என்று எந்த இயக்குனர் சொல்கிறாரோ அவரை மாற்றி விட்டு கதையைப் பிடிக்கும் இயக்குனர் தான் செலக்ட் பண்ணவும். விஜயகாந்த் சாரை நம்பி முதல் முறையாக நாங்கள் கதையை கேட்காமலேயே இதை செலக்ட் பண்ணி விட்டோம். இது பத்தி விஜயகாந்திடமும் கேட்கும்போது, லியாகத் அண்ணன் பாத்துக்குவார் என்று உங்களை சொன்னார். அதுதான் உங்களிடம் கருத்து கேட்டோம் என்று சரவணன் சார் சொன்னார்.

-விளம்பரம்-

படம் உருவான விதம்:

ஏவிஎம் நிறுவனத்தினர் விஜயகாந்தினை நம்பினார்கள். கேப்டன் என்னை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்தார். காரணம், அவருடைய பல படங்களில் நான் வேலை செய்து இருக்கிறேன். அதனால் அவருக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. எனக்கு வாழ்க்கையை கொடுத்து உயர்த்தியவர் என்பதால் நானும் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றினேன். அதன்பின் கதையை மாற்றி மாநகர காவல் திரைக்கதையை மாற்றி எழுதிக் கொடுத்தேன். அந்த கதை சரவணன் சாருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதே வேகத்தில் சூட்டிங் போய் படத்தையும் முடித்து விட்டார்கள். ஆனால், படத்தை என்னிடம் காண்பிக்கவில்லை. படத்தில் வசனம் லியாகத் அலிகான் மட்டும் தான் இருந்தது.

சமாதானம் செய்த விஜயகாந்த்:

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கதை, திரைக்கதை, வசனம் என எல்லா இடத்திலும் என் பெயர் வந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி போடாமல் இருந்தார்கள். இதைப் பற்றி விஜயகாந்த் சாரிடமும் போய் கேட்டேன். அவர், நம்ம படம் தானே, உங்க உழைப்பு தான். எப்போதும் எங்களுக்கு தெரியும் தானே என்று சமாதானம் செய்தார். அதற்குப் பிறகு படம் ரிலீஸ் ஆகி தமிழில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதை தெலுங்கிலும் டப் செய்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதுவரை நான் 35 படங்களுக்கு மேல் வசனம் எழுதி இருப்பேன். 6 படம் இயக்கி இருக்கேன். மாநகர காவல் கதையில் என் பெயர் வரவில்லை என்றாலும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், விஜயகாந்த் மீதான அன்பின் காரணம் தான் என்று கூறியிருந்தார்.

Advertisement