ரூபாய் 1000 கோடிக்கு மேல், வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. அதனால் இந்த ஆண்டின் டாப் லிஸ்ட் பட்டியல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வருடம் பல சுவாரசியமான விஷயங்களை திரைத்துறை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்ததையும், பெரிய பட்ஜெட் படங்கள் சொதப்பியதும் நம்மால் பார்க்க முடிந்தது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி உலக அளவில் தற்போது வரை ரூபாய் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு மட்டுமில்லாமல், இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனையை எந்தெந்த இந்திய திரைப்படங்கள் செய்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தங்கல் :
பாலிவுட்டில் இயக்குனர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் தங்கல். இப்படத்தில் அமீர்கான், சாக்ஷி திவாரி, பாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சுமார் 90 கோடி பட்ஜெட்டில் உண்மை கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படம், 2051 கோடி வசூல் செய்து இதுவரை அதிகபட்ச வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை கொண்டிருக்கிறது.

பாகுபலி 2 :
தெலுங்கு இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2. இப்படங்களில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இதன் முதல் பாகமே சிறப்பான வெற்றியை பெற்றிருந்ததால், சும்மா 250 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி இரண்டாம் பாகம் ரூபாய் 1814 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆர். ஆர். ஆர் :
இந்தத் திரைப்படமும் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் தான். இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆல்யா பட் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த இரண்டு வீரர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூபாய் 1288 கோடி வசூல் சாதனையை செய்தது.

கே. ஜி. எஃப் 2 :
கன்னடாவில் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கோலார் தங்க வயல் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றது. நடிகர் யாஷ் நடிப்பில் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 1208 கோடி வசூலை அள்ளிக் கொடுத்தது.
பதான் :
பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வெளியான படம் தான் பதான். நீண்ட நாட்களாக பாலிவுட்டில் எந்த படமும் வெற்றி பெறாத நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 1050 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்தது.
ஜவான் :
தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவான முதல் படம் தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூபாய் 1152 கோடி வசூல் சாதனை செய்து அட்லிக்கு பெருமையை சேர்த்தது.

கல்கி :
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கல்கி 2898 ஏ.டி திரைப்படம். எதிர்காலத்தில் நடப்பதாக எடுக்கப்பட்ட இந்த சயின்ஸ் பிக்சன் படம் சுமார் 550 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்தப் படமும் ரூபாய் 1052 கோடி வசூலை அள்ளி எடுத்தது குறிப்பிடத்தக்கது.






