கார்த்திகேயன் மணி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மெட்ராஸ் மேட்னி. இந்த படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் சத்யராஜ் ஒரு எழுத்தாளர். அவர் எப்போதுமே எலேட் லெவலில் தான் யோசித்து கதை எழுதி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண், சாதாரண மக்கள் பற்றி யோசித்து எழுதுங்கள். அதுதான் பெரிய ரீச் கிடைக்கும் என்று அவருக்கு அறிவுரையை சொல்கிறார். அதை ஏற்ற சத்யராஜ் ஒரு பாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவர் கதையை கேட்கிறார். காளி வெங்கட் ஒரு ஆட்டோ ட்ரைவர். அவர் தினமும் ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன்னுடைய மகன், மகளை படிக்க வைக்கிறார்.
அவர்களை எப்படியாவது பெரியாளாக்க வேண்டும் என்று போராடுகிறார். இதில் காளி வெங்கட்டின் மகளாக ரோஷனி இருக்கிறார். இவர் படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தாலும் அவருடைய திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று காளி வெங்கட் நினைக்கிறார். அதே நேரத்தில் மகன் இன்ஜினியரிங் படிக்கிறார். அவரை படிக்க பணம் வேண்டும் என்று காளி வெங்கட் போராடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் காளி வெங்கட் குடிக்க பாருக்கு சென்று இருக்கிறார். எதனால் இவர் பாருக்கு வந்தார்? அவருடைய குடும்பத்தின் நிலை என்ன? தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தாரா? மகனை படிக்க வைத்தாரா? சத்யராஜுக்கும் காளி வெங்கடுக்கும் இடையே என்ன நடந்தது? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் காளி வெங்கட் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை நடித்தார் என்பதை விட வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
ஒரு அப்பாவாக தன் பிள்ளைகளுக்கு இரவும் பகலும் பாராமல் உழைக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார். பாசமான அப்பாவாக இருந்தால் மட்டும் போதாது பொறுப்பான அப்பாவாகவும் இருக்கணும் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஒரு சில இடங்களில் காளி வெங்கட் நடிப்பு கண்கலங்க வைத்திருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் சத்யராஜ் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு மிடில் கிளாசில் என்ன அட்வென்சர் இருக்கப் போகிறது என்று நினைக்கிறார். ஆனால், காளி வெங்கட் கதையை கேட்கும் போது அவருடைய மனமே உருகிறது.

படம் முழுக்கவே ரொம்ப எமோஷனலாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். இவர்களை அடுத்து மகளாக படத்தில் ரோஷினி நடித்திருக்கிறார். ஜாதி, கலர் என்று இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறது? இப்படி இருந்தும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி சென்றாலும் அங்கெல்லாம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதை எல்லாம் சமாளித்து அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதையும் இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. டெக்னிக்கல், ஒளிப்பதிவு, இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. இருந்தாலும் பல இடங்களில் வரும் காட்சிகள் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் இல்லை. அதுதான் படத்தின் சுவாரசியத்தை கொடுக்கிறது. மொத்தத்தில் குடும்பங்கள் பார்க்கும் படமாக மெட்ராஸ் மேட்னி இருக்கிறது.
நிறை:
காளி வெங்கட் நடிப்பு
நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எமோஷனல் காட்சிகள், வசனங்கள் நன்றாக இருக்கிறது
பின்னணி நன்றாக இருக்கிறது

குறை:
கதைக்களத்தை விறுவிறுப்பாக காண்பித்திருக்கலாம்
திரைக்கதையில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
ரொம்ப எமோஷனலாக இருக்கிறது
மொத்தத்தில் மெட்ராஸ் மேட்னி - முயற்சி






