சமீபத்தில் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு சட்டை அணிந்து “Dark Dravidian, Proud Tamilan” என்று எழுதியிருந்தார். இளையராஜாவிற்கு தனது மகனிடம் இருந்தே எதிர்ப்பு வருகிறது என சமூக வலைதளம் பரபரப்பானது. இதற்கு பல சினிமா துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் இளையராஜா மற்றும் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தனர்.
இயக்குநர் பாக்யராஜ், ”மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று விமர்சித்தார். உடல் ரீதியான தாக்குதலில் பாக்யராஜ் பேசியிருந்ததால் கண்டனக் குரலும் அதேசமயம் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களிடம் இருந்து எதிர்ப்புக் குரலும் கிளம்பியது. இதற்கு வீடியோ விளக்கம் வெளியீட்டு மன்னிப்பு கேட்டார் பாக்கியராஜ். அதே போல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இளையராஜா குறித்து பேசிய போது :-
இளையராஜா குறித்து பேரரசு :
இளையராஜா அம்பேத்கரை ஒப்பிட்டது அவருடைய விருப்பம். அது அவரது கருத்து. இதில் சாதியை கொண்டு வருகிறார்கள். பெரியார் இல்லை என்றால் இசையமைத்து இருப்பீர்களா என கேட்கிறார்கள். அவருக்கு முன் எத்தனையோ கவிஞர்கள் இருந்துள்ளார்கள். அவர்களையெல்லாம் பெரியாரா வளர்த்துவிட்டார். இளையராஜா சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தமானவர்.
முத்துராமலிங்க தேவரோடுதான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும்
கருத்து சொல்வது அவரது உரிமை. இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டார். என்னை பொறுத்தவரை இன்னொருவரோடும் ஒப்பிட்டு இருக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரோடு. அவர்தான் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்னார். மோடியும் தேசியத்தோடும் தெய்வீகத்தோடும் இருக்கிறார். உண்மையாக முத்துராமலிங்க தேவரோடுதான் மோடியை ஒப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மோடி குறித்து மன்சூர் அலிகான் :
அதே போல மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜாவின் கருத்து குறித்து பேசிய மன்சூர் அலிகான் ‘அம்பேத்கருடன் மோடியை ஒப்பீட்டு பேசுவது தவறு. அவரின் கால் தூசிக்குக்கூட மோடி ஈடாக மாட்டார். அதனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது ரொம்ப ரொம்ப தவறு” எனத் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேரரசு மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் கலந்துகொண்டனர்.
பேரரசுவை கலாய்த்த மன்சூர் அலிகான் :
அப்போது பேசிய மன்சூர் அலிகான், அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு இல்லையா. தப்பு தப்பு இப்படியெல்லாம் பேசக் கூடாது. பக்கத்துலயே இயக்குநர் பேரரசு (பாஜக நிர்வாகி) இருக்காரு, இவர் இப்போ மறுப்பு சொல்வாரு. இயக்குநர் பேரரசு மிகப் பெரிய பாடலாசிரியர். அப்பாவே கொம்மா பாட்டெல்லாம் எழுதி இருக்கிறார் என்றதும் பேரரசு அது உங்க அம்மா என்று சொன்னார். அதற்கு மன்சூர் அலிகான் என் காதுல அப்படி தான் விழுந்தது என்று கூறி,
நீங்கள் பேசுங்கள் பேரரசு என்றார். அதற்கு பேரரசு நான் ஏற்கெனவே பேசிவிட்டேன். இதுக்கப்புறம் என்ன பேசுறது? என்கிறார். அதற்கு மன்சூர் நான் மோடியை திட்டியுள்ளேன், உங்களுக்கு கோபம் வர வேண்டாமா? என்றார் மன்சூர். அதற்கு பேரரசு அதை வெளியே காட்ட மாட்டோம் என்றார். உடனே மன்சூர், பேரரசுவுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை இவர் பெரிய படம் செய்ய வேண்டும். இவரை ஏன் இந்த திரைத்துறை பயன்படுத்திக்காம இருக்கிறது என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.