நாட்டில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. சட்டம்-ஒழுங்கு அதிகமாக பாதுகாக்கப்பட்டு வந்தாலும் ரவுடிகளின் அட்டகாசங்களுக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. சினிமாவில் தான் இந்த மாதிரி அடிதடி சண்டைகளை பார்த்திருந்தோம். தற்போது உண்மையான வாழ்க்கையிலும் அனைவரும் அறியும் வகையில் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஜெ.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் முகமூடி அணிந்து கொண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமாக காட்சியளிக்கிறது என்று சொல்லலாம்.
மாணவர்களுக்கு இடையேயான மோதல் காரணமாக தான் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கான காரணம் என்ன? ஏன் இப்படி நடந்தது? என்று பார்த்தால் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தினால் தான் இந்த மோதல் வெடித்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோதலில் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே வெளியாட்கள் வந்ததால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. இடதுசாரி அமைப்புகள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஜெ.என்.யு மாணவர் அமைப்பு தலைவர் அய்ஷி கோஷ் என்பவரை கடுமையாக தாக்கி உள்ளார்கள். அவருடைய முகம், உடம்பில் எல்லாம் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த கலவர பூமிக்கு காரணம் இடதுசாரி அமைப்புகள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த போர்களத்தினால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே ஜெ.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் 2 பிரிவினருக்கிடையே மோதல் நடந்து வருகிறது. அப்போது காவல்துறையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கலவரம் நடந்ததற்கான விளக்கத்தை கேட்டபோது மாணவர்கள் கூறியது, மாலை 4 மணி அளவில் இருக்கும் சபர்மதி விடுதிக்குள் முகமூடி அணிந்த சில பேர் புகுந்து அங்கிருந்த பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த மாணவர்கள் பேராசிரியர்கள் என எல்லார்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினார்கள். கற்களை கொண்டு அடிப்பதும், இரும்பு பைப்புகள், ஹாக்கி மட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கினார்கள்.
இதில் பல பேருக்கு ரத்தம் வழியும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது போலீசார் எங்களை காப்பாற்ற முன்வரவில்லை. அதுவும் முகமூடி அணிந்த நபர்கள் பூட்டப்பட்ட கதவுகளை அடித்து உதைத்துக் கொண்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்கள். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நடந்த கோர சம்பவத்தை பற்றி நான் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களை மிகக் கொடூரமாக தாக்கி உள்ளார்கள். போலீசார் இதை தீவிரமாக விசாரணை நடத்தி இந்த வன்முறையை தடுத்து நிறுத்தி அமைதியை மீட்டெடுக்க வேண்டும்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாடு எப்படி முன்னேறும். எங்கு தான் மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி என பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த தாக்குதலின் போது கையில்கட்டையுடன் ஒரு பெண்ணும் இருந்தது தான் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. மேலும், அந்த பெண் யார் என்றும் பலரும் ஆராய்ந்து வருகிறார்கள்.