தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.
அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.
அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கும் ‘ஆடை’ பட இயக்குநர் ரத்ன குமார் அளித்த பேட்டி ஒன்றில் “படத்தின் முதல் இரண்டு நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜய் சார் வசனம் பேசுவது மாதிரி எந்த காட்சியும் ஷூட் செய்யவில்லை. விஜய் சார் பாடல் கேட்பது, விளையாடுவது, சமைப்பது போன்ற காட்சிகளை தான் படமாக்கினோம்.
கண்டிப்பாக இந்த படத்தில் விஜய் சாரை நாம் புதிய பரிமாணத்தில் பார்க்கலாம். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் கமிட்டானதும், நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய படமாக மாறியது. எடிட்டிங்கில் எந்த சீனை கட் செய்து, எதை வைப்பது என்று ரொம்ப குழப்பமாகி விட்டது. படத்தின் மொத்த நீளத்தை கருத்தில் கொண்டு, ரொம்ப மனசே இல்லாமல் சில சீன்களை மட்டும் கட் செய்தோம்” என்று ரத்ன குமார் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் ரத்னகுமார் ஆடை படத்தின் இயக்குனர் என்பதும்குறிப்பிடத்தக்கது .