ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘மின்மினி’. இந்த படத்தில் எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், கௌரவ் கலை உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தை மனோஜ் பரமஹம்சா மற்றும் ஆர்.முரளி கிருஷ்ணன் தயாரித்து உள்ளார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள், கதீஜா ரஹ்மான் முதல் முதலாக இசையமைத்திருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்:
இப்படத்தில் பாரி முகிலன் (கௌரவம் கலை) தனது பள்ளியில் கால் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் மாணவனாக திகழ்கிறான். அதனால், அவன் செய்யும் சேட்டைகளை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. இப்படி இருக்கும் ஒரு சமயத்தில் அதே பள்ளிக்கு புதிதாக சபரி ( பிரவீன் கிஷோர்) சேருகிறான். பாரி கால் பந்தாட்டத்தில் சிறந்து விளங்குவது போல் சபரி செஸ் விளையாட்டை நன்றாக விளையாட கூடியவன். அதே நேரத்தில் சபரிக்கு ஓவியத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதும் கனவு. சபரியின் வருகைக்குப் பிறகு ஆசிரியர்களின் கவனம் அவன் மீது பாய்கிறது. அதனால், தன்னிடத்தை சபரி பிடித்து விட்டான் என்று பாரி கோபப்படுகிறான். இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் நிகழ்கிறது. மோதலில் தொடங்கிய இந்த சந்திப்பு கடைசியில் நட்பாய் மாறுகிறது.
ஆனால், எதிர்பாராமல் ஏற்படும் விபத்தால், சபரியை காப்பாற்ற போய் பாரி இறந்து விடுகிறான். தன்னைக் காப்பாற்றியதால் தான் பாரி இறந்து விடுகிறான் என்று சபரி மனதளவில் பாதிக்கப்படுகிறான். அதனால், குற்ற உணர்ச்சியில் தனக்கு பிடித்த ஓவியம், செஸ் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாரியின் கனவை சுமக்க தொடங்குகிறான். அப்போது, அதே பள்ளியில் வந்து சேர்கிறார் பிரவீனா. பாரி இறந்த பிறகு அவரின் இதயத்தினால் உயிர் பிழைத்தவர் தான் பிரவீனா. எனவே சபரி தனது குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தானா? அதற்குப் பாரியின் இதயத்தை சுமக்கும் பிரவீனாவின் பங்கு என்ன? என்பதுதான் மீதி கதை.
படத்தின் முதல் பாதி முழுவதும் நமக்கு நமது பள்ளி பருவத்தை ஞாபகப்படுத்துகிறது. இரண்டாம் பாதி முழுவதும் இமயமலைக்கு நம்மை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அழைத்துச் சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கதீஜா ரஹ்மானின் பின்னணி இசை படம் முழுவதும் இனிமை சேர்க்கிறது. அதேபோல் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கௌரவ், எஸ்தர், பிரவீன் ஆகிய மூவரும் வளரும் வரை அவர்களுக்காக 8 ஆண்டுகள் இயக்குனர் காத்திருந்து படத்தை எடுத்து இருக்கிறார். இயக்குனரின் இந்த முயற்சி பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், இதற்கு முன் எடுத்த படங்களின் உணர்வுகளை மிக மென்மையாக சொல்லி இருக்கும் இயக்குனர் ஹலிதா ஷமீம், இந்த படத்தில், குழந்தைகள் மேல் பெரிய தத்துவத்தை திணித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், படத்தில் வரும் சிறுவர்கள் யார்? அவர்களின் பெற்றோர்கள் போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் இல்லை. அதே போல் படத்தில் பேசப்படும் விஷயங்கள் எல்லாமே வெறும் வசனங்களாக தெரிகிறது தவிர எந்த ஒரு அனுபவத்தையும் சொல்லவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிறை:
ஒரு படத்திற்காக 8 வருடங்கள் காத்திருந்த இயக்குனரின் முயற்சி
கதீஜா ரஹ்மானின் பின்னணி இசை
ஒளிப்பதிவு சிறப்பு
குறை:
வசனங்களில் உயிர் இல்லை
நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது.
படம் எதார்த்தமாக இல்லை.
மொத்தத்தில் மின்மினி குறைவான வெளிச்சமே தருகிறது.