மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில், போர்ச்சுகீசியர்கள் கோவாவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். இது 1600ல் நடக்கிறது. அப்போது போர்ச்சுகீசிய மகாராஜாவாக டி காமா இருந்தார். இவருக்கு நம்பிக்கை உரியவராக இருந்தவர் பரோஸ் என்கிற மோகன்லால். இவர் தன்னுடைய மகாராஜாவிற்கு ரொம்ப விசுவாசமாக இருக்கிறார். மகாராஜாவின் மகள் இஸபெல்லா. இவருக்கு பரோஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு பிரச்சனைக்கு பிறகு டி காமா கோவாவில் இருந்து கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது தன்னுடைய விசுவாசியா இருந்த பரோசுக்கு துரோகம் செய்து அவரை பூதமாக மாற்றி தன்னுடைய வம்சத்தில் இருந்து ஆட்கள் வரும் வரை அவருடைய பொக்கிஷங்களை பாதுகாக்க கட்டளை போடுகிறார். அதோடு மற்றவர்கள் கண்ணுக்கு பரோஸ் தெரியாத படி மாற்றி விடுகிறார். அன்றில் இருந்து 400 ஆண்டுகளாக அந்த பொக்கிஷங்களை பரோஸ் பாதுகாத்து வருகிறார். பலர் அந்த பொக்கிஷத்தை எடுக்க முயற்சித்தும் பரோஸ் பாதுகாத்து வருகிறார்.
நானூறு ஆண்டுகளுக்கு பிறகு டி காமவினுடைய அடுத்த தலைமுறையினர் வரவில்லை என்றால் கடைசிவரை பரோஸ் அந்த பாதாளத்திலேயே பூதமாக இருக்க வேண்டியது தான். இறுதியில் பரோஸ் புதையலை சரியான நபர்களிடம் ஒப்படைத்தாரா? பரோஸுக்கு விமோசனம் கிடைத்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், இயக்குனராக அவதாரம் எடுத்த மோகன்லால் 3டி பேண்டஸி பாணியில் படம் எடுத்திருந்தது பாராட்டுக்குரிய ஒன்று.
மகாராஜாவுக்கு நம்பிக்கையுடையவராகவும், பாதுகாவலராகவும் மோகன்லால் மாஸ் காட்டியிருக்கிறார். ஆனால், நிறைய இடங்களில் செயற்கை தனம் எட்டிப் பார்த்திருக்கிறது. படத்தினுடைய முக்கிய கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காண்பித்திருக்கலாம். படத்தில் சில இடத்தில் வரும் காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையமாக வைத்து குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இந்த படத்தை இயக்குனர் மோகன்லால் எடுத்திருக்கிறார். ஆனால், கதையினுடைய திருப்பங்கள், கதாபாத்திரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தில் எமோஷனல் காட்சிகள் எல்லாம் செயற்கை தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது. தேவையில்லாமல் சில இடங்களில் நீண்ட வசனம். படத்தினுடைய நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பங்களிப்பு தெளிவாகத் தெரிகிறது. மொத்தத்தில் இயக்குனர் மோகன் லாலின் பரோஸ் படம் ஒருமுறை சென்று பார்க்கலாம்.
நிறை:
மோகன்லால் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
சில காமெடிகள் ஓகே
திரைக்கதை ஓகே
குறை:
கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
கதாபாத்திரங்கள் அழுத்தமாக காண்பித்து இருக்கலாம்
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் பரோஸ் – பேண்டஸி படம்