'காதல்' படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்த வரை ஒரு சில திரைப்படங்கள் காலத்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகிறது. அந்த வகையில் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் வகையில் இயக்கிய பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு திரைப்படம் தான். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இளசுகள் மத்தியில் பயங்கர ஹிட் அடித்தது. தற்போது வரை இந்தப் பாடல்கள் அனைத்தும் மக்களால் கேட்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இதுதான் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படம். இந்த படத்திற்குப் பிறகு இவர் மிகப்பெரிய இசை அமைப்பாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு இவர் சென்னை காதல், கல்லூரி, வெப்பம் போன்ற ஒரு சில சிறிய படங்களில் மட்டும் தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஜோஷ்வா ஸ்ரீதர் பேட்டி அளித்திருக்கிறார்.
ஜோஷ்வா ஸ்ரீதர் பேட்டி :
அதில், கடந்த ஐந்து வருடங்களாக நான் சினிமாவில் தான் மியூசிக் பண்றதில்லை. மற்றபடி நான் மியூசிக் பண்ணிட்டு தான் இருக்கேன். நான் முதலில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்தேன். எனக்கு இளையராஜாவிடம் வேலை செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. அதற்காக நான் நிறைய ட்ரை செய்தேன், ஆனால், அது நடக்கவில்லை. பிறகு, இசையமைப்பாளர் மணி ஷர்மாவிடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு கொஞ்ச நாள் ஹிந்தி படங்களிலும் வேலை செய்தேன். அதற்குப் பிறகு தான் எனக்கு ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவரிடன் நான் பார்த்தாலே பரவசம், பாய்ஸ் மற்றும் ஒரு சில ஹிந்தி படங்களுக்கு வேலை செய்து இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=ex9SQGIes2A
காதல் பட வாய்ப்பு:
இதற்கிடையே நான் 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். ஆனால், நான் ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை செய்யும் காலத்தில் நானும் என் மனைவியும் பிரிந்து விட்டோம் . அப்போதுதான் வேறு ஒரு பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் எனக்கு 'காதல்' பட வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இயக்குனர் பாலாஜி சக்திவேல் சார் தான் முதலில் கால் பண்ணி காதல் பட வாய்ப்பு குறித்து சொன்னார். அந்தப் படம் பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு வெளியில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. என்னுடைய லவ் ட்ராக் மூலமாக பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. அந்தப் பெண்மணி ஓட அப்பாவும் அம்மாவும் சேர்ந்து களங்கம் பண்ணி, நான் ஏதோ உலக மகா ரவுடி மாதிரி, என் பொண்ணை லவ் பண்ணிட்டான். என் பொண்ணை காப்பாத்துங்க என்று அரசாங்கத்து கிட்ட போயிட்டு முறையிட்டாங்க.
சென்ட்ரல் ஜெயில்ல வச்சாங்க :
அப்போ காதல் படம் ரிலீஸே ஆகல, பிரச்சனையை ஆரம்பிச்சிட்டாங்க. 2004 மற்றும் 2005ல் இருந்த அரசாங்கம் என்னைப் பற்றி என்னென்னமோ எழுதி தூள் கிளப்பினார்கள். அப்போ இருந்த அரசாங்கமும் காவல்துறையும் சேர்ந்து ஜாமின் கொடுக்காம என்னை ஒரு மாசம் சென்ட்ரல் ஜெயில்ல வச்சாங்க. அந்த பொண்ணு விஷயத்துல நான் எதுவும் தப்பு பண்ணலன்னு தெரிஞ்சும் கூட, என்னை ஏதாவது பண்ணனும். என் கேரியரை க்ளோஸ் பண்ணனும் என்று பண்ணாங்க. நான் ஜெயில்ல இருக்கும்போது காதல் படம் ரிலீஸ் ஆகி இரண்டு மாதம் ஆகிவிட்டது. அப்போ இந்த பொண்ணோட கேஸ் விஷயத்துல என்னை ஒன்னும் பண்ண முடியலன்னு சொல்லிட்டு, ப்ரொடியூசரை ஏமாற்றி விட்டேன் என்று சொன்னார்கள்.

மியூசிக் பண்ணுவதை நிறுத்தினேன்:
நான் இந்த பொண்ணோட பிரச்சினையில் இருப்பதினால் என்னால அட்வான்ஸ் வாங்கிட்டு அந்த படத்தை பண்ண முடியவில்லை. அவங்க அட்வான்ஸ திருப்பி கேட்டிருந்தால் நான் கொடுத்து இருப்பேன். ஆனால், என் மீது தேவையில்லாமல் கேஸ் போட்டாங்க. ஒரு விதத்தில் அவங்க வெற்றி அடைந்து விட்டாங்க. எனக்கு எந்த பெரிய படங்களும் வரவில்லை. அப்படியே என் வாழ்க்கை சின்ன படங்களை வைத்து ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 2020ல் தான் நான் படங்களில் மியூசிக் பண்ணுவதை நிறுத்தினேன். அதற்குப் பிறகு கோவிட் டைமில் ஜோதிடம் படித்து, அதை இரண்டு வருடங்கள் பண்ணிட்டு இருந்தேன். பின்பு, அது எனக்கு செட்டாகவில்லை. இப்போ நான் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.






