நடிகர் நகுல் தனது அக்கா தேவயானி மற்றும் மாமா ராஜகுமாரன் குறித்து பேட்டியில் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. இவர் மும்பையைச் சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 6 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
தேவயானி- ராஜகுமாரன் திருமணம்:
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை தேவயானி அவர்கள் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இவர்களின் காதலுக்கு அவரின் தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின் வீட்டிற்கு தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களை திருமணம் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் நடந்தது. இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்து இரு வீட்டாரும் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். அதிலும், தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸ் புகார் எல்லாம் அடித்திருந்தார்கள்.
ராஜகுமாரன் மீது கோபத்தில் இருந்த நகுல்:
மேலும், இந்த காரணத்தினால் தேவயானியின் தம்பி நடிகர் நகுல் வெகு நாட்களாக இயக்குனர் ராஜகுமாரனிடம் பேசாமல் இருந்தார். தேவயானிக்கு நகுல், மயூர் என இரண்டு சகோதரர்கள் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் நகுல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொடக்கத்தில் இவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தற்போது இவர் வெற்றி கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக இவர் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படமும் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நகுல் குறித்து ராஜகுமாரன் :
இதனிடையே கடந்த வருடம் நடிகர் நகுல் குறித்து இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் அவர்கள், என்னுடைய மைத்துனர் நகுல் என்னுடன் இன்னுமும் பேசுவது இல்லை. நான் செய்தது தேச துரோகமாக அவர் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார். எனது மாமியார் எங்களை ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. தேவயானி வீட்டில் யாரும் எங்களுடன் தொடர்பில் இல்லை. தேவயானியின் இன்னொரு தம்பி பூனேவில் வேலை செய்கிறார். அவர் மட்டும் எப்போதாவது போனில் பேசுவார். ஆனால், நகுல் அவ்வளவாக தேவயானியிடம் பேசுவது இல்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது நடிகர் நகுல் தனது அக்காவிடம் சகஜமாக பேசுகிறார் என சோசியல் மீடியாவில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.
அக்கா மாமாவிடம் ராசியான நகுல்:
சமீபத்தில் கூட நகுலின் திரைப்பட விழாவில் தேவயானி கலந்து கொண்டு, அவருக்காக பேசியிருந்த வீடியோக்கள் எல்லாம் வெளியாக இருந்தது. இந்நிலையில் இன்டர்வியூ ஒன்றில், தனது அக்கா தேவயானி, ஆசீர்வதிக்கப்பட்டவர். அவங்களுக்கு நிறைய டேலண்ட் இருக்கு. இதுபோல் ஒரு அக்கா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவங்களுக்கு எங்க போனாலும் நல்ல அன்பு கிடைக்குது. அதனால் கண்டிப்பாக என்னுடைய அக்கா கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று சொல்வேன் என்றார். அதை தொடர்ந்து ராஜகுமாரன் குறித்து கேட்டபோது, அவர் என்னுடைய மாமா. அவர் என்னுடைய அக்காவை நிறைய காதலிக்கிறார். அவருடைய காதல் புனிதமானது என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.