பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் பாரம். இந்த படம் தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும், 66வது தேசிய திரைப்பட விருது வென்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படம் இது தான். இந்த படத்திற்கு வேத் நாயர் இசை அமைத்து உள்ளார். ஜெயந்தன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். வருடம் முழுக்க எவ்வளவு படம் வந்தாலும் சில படங்கள் மட்டும் தான் மனிதனின் எதார்த்தமான வாழ்வியல் கதையை பேசுகின்றன. மனிதன் வாழ்க்கையில் சொல்லப்படாத எதார்த்தமான சில கதைகளையும் இந்த மாதிரி படங்கள் தான் காட்டுகின்றன. அப்படி ஒரு படமாகத் தான் பாரம் படம் அமைந்து உள்ளது.
கதைக்களம்:
வாட்ச்மேனாக ராஜு என்பவர் பிளாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு அக்கா, அக்கா மகன்கள் மூவர் ஆகியோர் உள்ளார்கள். இவருடைய மகன் செந்தில் இவர் மீது எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார். ராஜீ மனைவி இறந்து விடுகிறார். தன் மகனுடன் தான் இருந்து வருகிறார் ராஜீ. ஒரு நாள் பணி முடிந்து வீடு திரும்பும் போது ராஜுக்கு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் ராஜுக்கு இடுப்பு உடைந்து விடுகிறது. ஆனால், ராஜீ இறந்து விட்டதாக ராஜீ மகன், ராஜீவின் அக்காவும், அக்காவின் மகன்களுக்கும் தகவல் கொடுக்கிறார். பின் அவர்களும் வருகின்றனர். எப்படி கிராமத்தில் துக்க வீட்டில் நடக்குமோ அந்த அளவிற்கு அடிதடி மோதல் நடக்கிறது.
ராஜுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜுவின் மருமகன் சுகுமார் மரணம் குறித்து ஊரில் விசாரிக்கிறார். அப்போது கிடைத்த அதிர்ச்சி தகவலால் போலீசில் புகார் அளிக்கிறார் சுகுமார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சனையை ஊடகத்தின் பக்கம் கொண்டு செல்கிறார் சுகுமார். ராஜுவுக்கு என்ன நடந்தது? ராஜு எப்படி மரணமடைந்தார்? ராஜீவின் மரணத்திற்கும் அவர் மகனுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? மருமகனின் சுகுமார் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததா? என்பதே இந்த படத்தின் மீதி கதை. பாரம் படம் திரைக்கு வருவதற்கு முன்னே தேசிய விருதை பெற்று விட்டது.
இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி அவர்கள் தான் படித்த தலைக்கூத்தல் என்ற கதையில் உள்ள நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்கிய படம் தான் பாரம். இந்த படத்தில் புதுமுகங்களாக பலர் நடித்து உள்ளனர். கிராம வாழ்க்கையும், கதாபாத்திரத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள். முதியவர்களை சில குடும்பங்கள் பாரமாக நினைத்து ஒதுக்குகிறார்கள். வயதான நிலையிலும் அவர்களுக்கு செயற்கை மரணத்தை உண்டாக்கும் நிகழ்வு அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர்.
இந்த படம் 90 நிமிடம் மட்டும் தான் ஓடியுள்ளது. கருணைக் கொலைகள் குறித்த சம்பவம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நீதிமன்றத்தில் இதற்கு முழுமையான தீர்வுகள் இன்னும் வரை கிடைக்கவில்லை. இதை நினைவுபடுத்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
கதைக்கேற்ற காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவு ,இசை எல்லாம் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
பிளஸ்:
இந்த படம் முழுக்க முழுக்க இந்த கால தலைமுறையினருக்கு கூறும் வகையில் உள்ளது.
சமூகத்திற்கான விழிப்புணர்வு.
புதுமுக நடிகர்களாக இருந்தாலும் கதையை தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
மைனஸ்:
கதைக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
புதுமுக நடிகர்கள் என்பதால் மக்கள் மத்தியில் அவ்வளவு எளிதாக பிரபலமடையவில்லை.
படத்தில் சில இடங்களில் லாஜிக் உதைக்கிறது.
இறுதி அலசல்:
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ள படம். இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் கதை. மொத்தத்தில் பாரம் -முதியவர்கள் சுமை அல்ல.