பிரபல நடிகை நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்து இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும், சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக நயன் நடித்த படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75 ஆவது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட், மாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நயன்தாரா திருமணம்:
இப்படி கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று அவர்கள் பெயர் வைத்தது நாம் அறிந்ததே.
குழந்தைகளுக்கு நல்ல தாய்:
மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு சீனாவுக்கு சுற்றுலா சென்று இருந்தனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு தங்களது இரண்டாவது திருமண நாளை அவர்கள் கொண்டாடினார்கள். மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சினிமாவை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார்கள்.
நயன்தாரா வீடியோ:
தற்போது நயன்தாரா தன்னைச் சுற்றி பல ஆண்டுகளாக உலா வரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தன்னைக் குறித்து எழும் பிளாஸ்டிக் சர்ஜரி வதந்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதாவது சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், ‘எனக்கு என் புருவம் மிகவும் பிடிக்கும். நான் புருவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுப்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன். ஏனென்றால், அதுதான் முகத்திற்கு ‘கேம் சேஞ்சர்’. அதில் அடிக்கடி வித்தியாசம் தெரிவதால், நான் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை’.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும், தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. நீங்கள் என்னை கிள்ளி பார்க்கலாம், எரித்துக் கூட பார்க்கலாம். ஆனால், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். தற்போது நயன்தாரா தமிழில் தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 மற்றும் மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.