தனது மகனின் திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு நெப்போலியன் கொடுத்திருக்கும் பதிலடி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது மகனின் சிகிச்சைக்காக, இந்தியாவை விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் பல தொழில்களில் சிறந்து விளக்குகிறார். சமீபத்தில் தான், தனது மகன் தனுஷின் திருமணத்தை வெகு விமர்சையாக ஜப்பானில் நடத்தி இருந்தார். தனுஷால் விமானத்தில் செல்ல முடியாததால், அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு சொகுசு கப்பலில் திருமணத்திற்காக நெப்போலியன் குடும்பத்தினர் சென்று இருந்தனர். பல பிரபலங்கள் கலந்து கொண்டு விமர்சையாக நடந்த நெப்போலியன் மகனின் திருமணத்தை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.
மருத்துவர் காந்தராஜ்:
அந்த வகையில், நெப்போலியன் மகனின் நிச்சயதார்த்தம் முடிந்த போதே டாக்டர் காந்தராஜ் என்பவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், நெப்போலியன் மகன் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் ஒரு அபத்தமான நோய், ஒரு அரிய வகை நோய், பரம்பரையாக வரக்கூடிய நோய் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 18 வயதிலேயே இறந்து விடுவார்கள். நெப்போலியன் மகன் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனைதான். அவருக்கு எந்த நேரத்திலும் எது வேணாலும் நடக்கலாம். இந்த நோய்க்கு ஹலோபதியில் மருந்து இல்லை.
இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது:
அதுபோல அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவரை திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரின் பெற்றோர்கள் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்கள் இது போன்ற ஊனமுற்றவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். சில பெண்கள் விளம்பரத்திற்காக கூட இப்படி செய்வார்கள் என்று டாக்டர் காந்த ராஜ் கூறியிருந்தார். சமீபத்தில் தனது மகனின் திருமணம் முடிந்த நிலையில் நெப்போலியன் பல பேட்டிகளில் பேசி வருகிறார். அதில், என்னை உலகம் முழுவதும் சிறந்த தந்தை என்று சொல்கிறார்கள். அதை நான் எதிர்பார்க்கவில்லை.
நெப்போலியன் பேட்டி:
நான் என் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்கிறேன். என்னை சிறந்த தந்தை என்று முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் போது சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல் நிறைய பேட் கமெண்ட்ஸ் வருகிறது. என் பிள்ளையைப் பற்றி எனக்கு தான் தெரியும். எங்கேயோ உட்காந்து கமெண்ட் போடற உனக்கு என்ன தெரியும். குறிப்பாக ஒன்னு சொல்ல வேண்டும் என்றால், டாக்டர் ஒருத்தர் ரொம்ப தப்பாக பேசி இருந்தார். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் நிறைய நல்ல காரியங்கள் பண்ணுவேன் அதை வெளியே சொல்ல மாட்டேன். இப்போ சொல்கிறேன்.
காந்தராஜ் குறித்து நெப்போலியன்:
‘என் உயிர்த் தோழன் பாபு’ என்று ஒருத்தர் இருந்தார். அவர் எனக்கு பழக்கம் இல்லை. படப்பிடிப்பில் நடந்த விபத்தால் 30 வருடமாக படுத்த படுக்கையோடு இருந்தார். கடைசி நாலு வருஷம், எதுவுமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டார். நடிகர் பொன்வண்ணன் சொல்லி, அவருக்கு மாசம் மாசம் நாலு வருஷமா நான் சப்போர்ட் பண்ணேன். அவருடைய சொந்தக்காரர் தான் அந்த டாக்டர். இன்னைக்கு அவர் மீடியால உக்காந்துட்டு என் பிள்ளையைப் பற்றி பேசிட்டு இருக்கார். உங்க குடும்பத்தில் ஒரு குழந்தை முடியாமல் இருந்திருக்கிறான் அவனை உங்களால் பார்க்க முடியவில்லை. ஆனா, என் குழந்தையை பற்றி குறை சொல்லிட்டு இருக்கீங்க. அதை பார்க்கும்போது இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நான் ரொம்ப வருத்தப்பட்டேன் என்று மருத்துவர் காந்த ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.