மறைந்த சீரியல் நடிகர் நேத்ரனின் கடைசி நாட்கள் குறித்து அவரது மனைவி தீபா அளித்திருக்கும் பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நேத்ரன். இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் ரோலில் தான் நடித்து இருந்தார். இவர் முதன் முதலாக ‘மருதாணி’ என்ற சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சீரியல்கள் தான். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார். குறிப்பாக, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் ஜோடி நம்பர் 1′ என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயா கலந்து இருந்தார்கள்.
நேத்ரன் குறித்த தகவல்:
இப்படி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியாவில் பயணித்துக் கொண்டிருந்தார். இதனிடையே இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சின்னத்திரையில் திருமணம் நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் அபிநயா ‘கனா காணும் காலங்கள்’ என்ற வெப் சீரிஸில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய இரண்டாவது மகளும் சினிமாவில் நடிக்கயிருக்கிறார்.
நேத்ரன் உடல்நிலை:
அதேபோல் நேத்ரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பொன்னி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். திடீரென்று பல மாதங்களாகவே இவர் எந்த தொடரிலுமே காணவில்லை. அதற்கு பின் விசாரித்த போது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் என்று தெரியவந்தது. அதன்பின், சமீபத்தில் நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய இறப்பு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலருமே இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
தீபா நேத்ரன் பேட்டி:
இந்நிலையில் நடிகை தீபா பேட்டி ஒன்றில் தன் கணவரின் மரணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நேத்திரனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹோமியோபதி மீது நிறைய நம்பிக்கை இருந்தது. இது தவிர, கடந்த நாலு ஆண்டுகளாகவே அடிக்கடி வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்தார். அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
பெரிய தவறு செய்து விட்டோம்:
அதன் பின், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து நான்கு மாத சிகிச்சை அளித்திருந்தோம். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கொஞ்ச நாளுக்கு பிறகு, ஆப்ரேஷனுக்குப் பின் போடப்பட்ட தையல் பிரிந்து விட்டது. தையல் பிரிந்ததால் அவருக்கு ஹீமோ சிகிச்சை அளிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளாக வயிற்றுவலி இருந்த நிலையில், ஆஸ்பத்திரியிலேயே ஸ்கேன் எடுத்துப் பார்த்து இருந்தால் நேத்ரனைக் காப்பாற்றி இருக்கலாம். அதைச் செய்யாமல் பெரிய தவறு செய்து விட்டோம் என நடிகர் தீபா நேத்ரன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.