பிரபல நடிகை நிவேதா தாமஸ் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கிக் கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் ‘மை டியர் பூதம்’. இந்தத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
மேலும், உலகநாயகன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாகவும் நடத்து இருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
குழந்தை நட்சத்திரம் – ஹீரோயின்:
இருப்பினும், தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் உள்ள ஒரு சில இளம் நடிகர்களுடன் நடித்து இருந்தார். நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜயுடன் ‘குருவி’ மற்றும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நடிகை நிவேதா தாமஸ் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது விஜய் படத்தில் தான்.
It’s been a while….. but.
— Nivetha Thomas (@i_nivethathomas) June 24, 2024
Finally!
❤️
நிவேதா தாமஸின் பதிவு:
இந்த நிலையில் தான் நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் காதலைப் பற்றி பகிர்ந்து உள்ளார். அதாவது, “It’s been a while…..but..Finally!” என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவால் இவருடைய ரசிகர்கள், நிவேதா தாமஸ் காதலித்து வருகிறார் என கமெண்ட்களில் கூறி வருகின்றனர். மேலும் சிலர், நிவேதாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிவேதா தாமஸ் குறித்து:
நிவேதா தாமஸ் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். சென்னையில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. நிவேதா தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், பிரெஞ்ச், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர். இவர் முதல் முதலில் ‘வெருதே ஒரு பார்யா’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர். அந்தப் படத்திற்காக ‘சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில திரைப்பட விருது’ வென்றார்.
திரைப்பட வாய்ப்பு :
என்னதான் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது நாயகியாக பல படங்களில் நடித்து வந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக திகழ முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமே இவரது உயரம் தான் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். கடைசியாக ‘எந்தடா ஷாஜி’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில படங்களில் நிவேதா தாமஸ் கமிட் ஆகியுள்ளார் என்று தெரிகிறது.