தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் நாயகி ஸ்வாசிகா தன்னுடைய 26 வயதிலேயே கணவரை இழந்து விதவையாக இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தன்னுடைய இரண்டு மகன்களையும் ரொம்பவே கஷ்டப்பட்டு ஸ்வாசிகா படிக்க வைக்கிறார். தன் கணவனை இழந்து தனியாக வாழும் ஒரு பெண் எதிர்கொள்ளும் அனைத்து விதமான கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் ஸ்வாசிகா சந்தித்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஸ்வாசிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், இவருடைய மூத்த மகன் அஜய் இதை அறிந்து தன்னுடைய அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். இதனால் மகன்களுக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லாததால் ஸ்வாசிகா தனியாகவே வாழ்க்கையை வாழ தொடங்குகிறார். மகன்கள் இருவருமே படித்து முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் போது காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போதுதான் தன்னுடைய தாயினுடைய நியாயமான ஆசையையும் புரிந்து கொள்கிறார்கள். அப்போது ஸ்வாசிகா தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால், மகன்கள் தன்னுடைய அம்மா மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஸ்வாசிகா ஒத்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் விஜய் ஆண்டனி என்ட்ரி கொடுக்கிறார்.

ஸ்வாசிகா- விஜய் ஆண்டனி இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பின் தன்னுடைய மகன்களின் வற்புறுத்ததால் ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி உடன் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார். தன்னுடைய மகன்களின் கண்முன்னே திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடக்க தயாராகிறது. ஆனால், ஊர்மக்கள் வெட்டு கம்பு வீச்சரிவாளுடன் திருமணத்தை நிறுத்த வருகிறார்கள். திட்டமிட்டபடி ஸ்வாசிகா-விஜய் ஆண்டனி திருமணம் நடந்ததா? இல்லையா? ஸ்வாசிகாவின் வாழ்க்கை என்னானது? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.
இயக்குனர் சசி ரொம்ப எமோஷனலாக அனைவரின் மனதை தொடும் வகையில் ஒரு நேர்த்தியான கதையை கொடுத்திருப்பது பாராட்டுக்கூடிய விஷயம். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இயக்குனர் இந்த கதையை கொடுத்திருக்கிறார். இயக்குனரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். கணவனை இழந்து வாழும் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அந்தப் பெண் மறுமணம் செய்து கொள்ள நினைக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையுமே இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
படத்தில் கதாநாயகி ஸ்வாசிகாவின் நடிப்பு அட்ராசிட்டியாக இருக்கிறது. அனைத்து காட்சியிலும் தூள் கிளப்பி இருக்கிறார். அதேபோல் ஹீரோ விஜய் ஆண்டனிகதாநாயகன் என்ற ஒரு பந்தா இல்லாமல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு கதாநாயகன் இப்படி எல்லாமும் நடிக்க முடியுமா? என்ற கோணத்தை யோசிக்க வைத்திருக்கிறார். அதே போல் இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகர்களுடைய தேர்வும் கதாபாத்திரங்கள் வடிவமைப்பும் அருமையாக இருக்கிறது.

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. உணர்வுபூர்வமான எதார்த்தமான காட்சிகள் தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ரொம்ப எமோஷனாக செல்கிறது. கணவனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணுடைய கதையை இயக்குனர் ரொம்ப ஆழமாக சொல்லி இருப்பது பெரிய விஷயம். ஒரு அம்மாவை பிள்ளைகள் மனுசியாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை சிறப்பாக சொல்லி பார்வையாளர்களின் கவனத்தையும் இயக்குனர் ஈர்த்து இருக்கிறார். மொத்தத்தில் குடும்பத்துடன் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:
ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி நடிப்பு
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நேர்த்தியாக செல்கிறது
சமூகத்திற்கு நல்ல மெசேஜ்
உணர்வுபூர்வமான எதார்த்தமான கதை
குறை:
சில லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை
மொத்தத்தில் நூறு சாமி - அம்மாவின் தியாகம்






