கோழிப்பண்ணை செல்லதுரை படம் தொடர்பாக இயக்குனரும், நடிகருமான கரு. பழனியப்பன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக சீனு ராமசாமி திகழ்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதை தொடர்ந்து சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் கோழிப்பண்ணை செல்லதுரை.
சீனு ராமசாமி இயக்கிய படம்:
இந்த படத்தில் ஏகன், யோகி பாபு, பிரகீடா, ஐஸ்வர்யா தாத்தா, பவா செல்லதுரை, மானசி கொட்டாச்சி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். டி. அருள் நந்து மற்றும் மேத்யூ அருள் நந்து என்பவர் தயாரித்திருந்தார்கள். இந்த படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூலை பெறவில்லை.

கரு.பழனியப்பன் பதிவு:
இந்த நிலையில் சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை படம் குறித்து இயக்குனர் கரு.பழனியப்பன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு, கடந்த ஒரு மாத காலமாய் கண்டவிடத்தில் எல்லாம் "அண்ணே கோழிப்பண்ணை செல்லதுரை படம் பாக்கலையா? பாத்துட்டு , நாலு வரி நல்லதா , முகநூலில் எழுதுங்க”என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். கல்லூரிக் காலம் முதலேயே நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும்
இதுவரை கடிதம் எழுதிக் கொண்டதில்லை.

இதுவே முதல் கடிதம். உங்களுடைய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறவில்லை எனினும் ஓடிடி தளங்களில் வெளியான பின் பலரும் தங்களை பாராட்டுகின்றனர் . அதை தாங்களும் , தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே . ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது.
அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும். சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தைப்பாராட்டுகளில் குதூகலித்து தேங்கி நின்று விடாதீர்கள். “நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா “ என்ற அடைமொழிகளோடு தாங்கள், கஸ்தூரிராஜா தங்களுக்கு எழுதிய பாராட்டை பகிர்ந்து இருந்தீர்கள். நல்லது. மகிழ்ச்சி. தனக்கு அடுத்த தலைமுறை இயக்குனர்களின் மேல் திரு கஸ்தூரிராஜா காட்டும் அன்பு அது.

இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். முகம் தெரியாத ரசிகன் நம் படைப்பை ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும் போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே. "தென்மேற்கு பருவக்காற்று" "தர்ம துரை" படங்களுக்கு மேலாக , சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும் என்று கூறி இருக்கிறார்.






