தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களை தாண்டி சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்களின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் அய்யாகண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் கஜேந்திரன். இவர் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கஜேந்திரன், நான் சில படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்திருக்கிறேன். டான், செக்கச் சிவந்த வானம், பேட்ட படங்களிலும் பேக்ரவுண்டில் நிற்பேன். பராசக்தி படத்தின் வாய்ப்புக்காக நான் மூணு வருஷம் ஆக முயற்சி செய்தேன். இந்த படத்தில் சூர்யா சார் நடிப்பதாக இருந்தபோதே நான் பட குழுவிடம் ஆடிஷன் கொடுத்திருந்தேன்.
பராசக்தி படம்:
இந்த படம் ஆரம்பிப்பதாக இருந்தபோது மீண்டும் ஆடிஷன் போனேன். சுதா மேம், நான் அய்யாகண்ணு கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போவேன் என்று தோன்றியிருந்தது. அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாராகிற வேலையில் இறங்கி விட்டேன். முகம் கருப்பாக இருக்க வேண்டும் என்பதால் தினமும் சில விஷயங்கள் செய்தேன். இத்தனை வருடம் பெரிய கனவோடு சுற்றி வந்த எனக்கு இந்த வாய்ப்பு ரொம்ப முக்கியமானதாக இருந்தது. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று முன்னேற முயற்சித்தேன்.

கஜேந்திரன் பேட்டி:
அப்படித்தான் இந்த படத்துக்குள் வந்தேன். நான் youtube-ல் ஜில் பண்ணு மாப்பி சேனலில் கடந்த சில வருடங்களாக வீடியோ பண்ணிக் கொண்டு வருகிறேன். மேலும், பராசக்தி படம் ரிலீஸ் ஆகுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய அம்மா இறந்து விட்டார்.. படம் வந்த பிறகும் நான் போய் படம் பார்க்கவில்லை. ஆனால், நண்பர்கள் பார்த்துவிட்டு வந்து என்னை பாராட்டி இருந்தார்கள். படப்பிடிப்பு தளத்திலும் நான் நல்லா நடித்திருக்கிறேன் என்று பாராட்டிருந்தார்கள். பயத்துடனே இருந்த எனக்கு பெரிய பெரிய நடிகர்கள் கொடுத்த பாராட்டுதான் தைரியத்தை கொடுத்தது.

படம் பற்றி சொன்னது:
படம் வெளியானதும் நண்பர்கள் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். பராசக்தி படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அம்மா என்னை திரையில் பார்த்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நான் நடித்த வீடியோக்களை டிவியில் போட்டு காண்பிக்க சொல்லுவார்கள். ஆனால், படம் வந்தால் தியேட்டருக்கு கூட்டிட்டு போய் காட்டணும் என்று நினைத்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது.
இன்னும் நான் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முழுமையாக முயற்சி பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.






