சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து தங்கலான் பட நடிகை பார்வதி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பலருமே புகார் கொடுத்திருந்தார்கள். அதிலும் சின்மயி- வைரமுத்து இடையே நடந்த சச்சரவு மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது.
அதேபோல் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் நடிகர் திலீப்குமார் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டிருந்தது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
ஹேமா கமிட்டி :
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருக்கிறார்கள். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கையையும், ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பார்வதி பேட்டி :
அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பார்வதி, எல்லா நடிகைகளுமே அட்ஜஸ்ட்மெண்ட் செய்தவர்கள் தான் என்ற மன நிலையில் பேசுகிறார்கள். இதற்காக நான் ஆறு- ஏழு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன்.
அட்ஜஸ்மென்ட் குறித்து சொன்னது:
இதனால் தான் எனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் யாருமே தருவதில்லை என்று கொந்தளித்து பேசி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து பிரபல நடிகர் டோவினோ தாமஸ், ஒட்டுமொத்த கேரளா திரை உலகை குற்றம் சாட்டுவது ஏற்க முடியாது. இது எனக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. மலையாள திரையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்குது. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஒருவர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தவறு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.
பார்வதி மேனன் குறித்த தகவல்:
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி மேனன். இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர். அதன் பின் இவர் சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.