தனது மாமா தனுஷுக்கு நன்றி தெரிவித்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ஹீரோ பவிஷ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:
இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இசை வெளியீட்டு விழா:
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. அதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷின் அக்கா மகன் பவிஷ், இந்தப் படத்திற்காக எனக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒருநாள் ஸ்ரேயாஸ் அண்ணா வந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற என்று சொன்னாரு.
பவிஷ் பேசியது:
அவர் சொன்னதிலிருந்து எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னு கூட தெரியல. இந்தப் படத்தோட ட்ரெய்லர் வெளியானதும், அதைப் பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன். அந்த அளவுக்கு என்னைய வித்தியாசமாக காமிச்சி இருக்காங்க. அதற்காக ரொம்ப நன்றி. இந்தப் படத்துல என் கூட நடிச்சவங்க எல்லாரையும் பிரண்ட்ஸ் என்று தான் சொல்லணும். அவங்க கூட எல்லாம் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. மேலும், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நபராக இருக்கக்கூடிய தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி.
தனுஷ் குறித்து:
அவர் எனக்கு பண்ணியிருக்கிற விஷயங்களுக்கு நன்றி சொன்னா மட்டும் போதாது. அதே மாதிரி நான் அவரைப் படுத்தின பாட்டுக்கெல்லாம் சாரி சொன்னா மட்டும் பத்தாது. எதை நம்பி எனக்கு இந்த வாய்ப்பை நீங்க கொடுத்தீங்கன்னு தெரியல. ஆனால், அதற்காக நான் கடினமாக உழைப்பேன் என்று பவிஷ் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியோடுப் பேசி இருந்தார். தற்பொழுது தனுஷ் ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ படங்களில் நடித்திருக்கிறார். அதையடுத்து ‘ D55’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை ‘அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார்.