திகில் விரும்பிகளுக்கு விருந்தாக வெளிவந்திருக்கிறது ‘பேச்சி’ படம். காயத்ரி, பாலா சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ், வாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியுள்ள படத்தை, வெயிலான் என்டர்டெயின்மென்ட் வெரஸ் ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆடியன்சை அலற வைப்பதில் பேச்சு வெற்றி பெற்றதா? இல்லையா? என்ற முழு விமர்சனத்தை பார்ப்போம்.
கதைக்களம்:
காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை மீறி அவர்கள் உள்ளே செல்கின்றனர்.
அதற்குப் பிறகு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அதனால் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் வருகிறது. அதை சமாளிப்பதற்கு அவர்கள் நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். மேலும் காட்டில் காத்திருக்கும் பேச்சுக்கு இவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்தப் பேச்சு? எதற்காக அவள் காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? பேச்சியிடமிருந்து அனைவரும் தப்பிப்பார்களா? என்பதுதான் மீதி கதை.
பிரேமம் படத்தின் இசையமைப்பாளர் பேய்க்கு கூட இப்படி பின்னணி தருவாரா என்ற வகையில் அட்டகாசமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் ஒளிப்பதிவு நம்மை காட்டுப் பகுதிக்கே அழைத்துச் செல்கிறது. சவுண்ட் எபெக்ட்ஸ் சிறப்பாக அமைந்திருப்பதால் திகிலூட்டும் காட்சிகள் நம்மை மிரட்ட வைக்கின்றன. கதாநாயகன் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார். ஹீரோவின் நண்பர்கள் சில இடங்களில் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள்.
கதாநாயகி காயத்ரி படம் முழுவதும் நடிப்பால் பலம் சேர்த்துள்ளார். கிளைமாக்ஸில் அவர் தரும் ட்விஸ்ட் தான் பேயைவிட பயங்கரமாக இருக்கிறது. நடிகர் பாலா சரவணா மட்டுமே பல இடங்களில் நடிப்பில் அசத்துகிறார். பேச்சியாக வரும் பாட்டி படு பயங்கர பர்பாமன்ஸ் செய்து மிரட்டுகிறார். பகலிலும் பேய் படம் எடுக்க முடியும் என்பதை படக்குழுவினர் நிரூபித்திருக்கிறார்கள். இதற்காகவே இயக்குனருக்கு ஒரு தனி சபாஷ் போடலாம்.
நிறை:
பின்னணி இசை பயங்கரம்
கதைக்களம் அருமை
திகிலூட்டும் காட்சிகள்
குறை:
நடிகர்களுக்கு நடிக்க காட்சிகள் இல்லை
சில இடங்களில் சுவாரஸ்யம் கம்மி
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் பேச்சு, ரசிகர்களை மிரள வைக்க குறை வைக்கவில்லை.