மருந்து வாங்க கூட காசு இல்லாமல் உதவி கேட்டு பிதாமகன் தயாரிப்பாளர் தவித்து வரும் பரிதாப நிலைமை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரை உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளராக கொடி கட்டி பறந்தவர் வி ஏ துரை. இவர் சத்யராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த என்னம்மா கண்ணு என்ற படத்தை தயாரித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா, ரஜினி நடித்த பாபா போன்ற படங்களை தயாரித்து தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.
ஆனால், இவர் விஜயகாந்தை வைத்து எடுத்த கஜேந்திரா படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் வி ஏ துரை அவர்கள் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்தித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் புதிதாக படம் தயாரிக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் இவருடைய குடும்ப வாழ்க்கையை சிதைந்து போனது. அதுமட்டுமில்லாமல் பத்து வருடத்திற்கு முன்பே அவருடைய மனைவியும், மகளும் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
வி.ஏ.துரை குறித்த தகவல்:
இதோடு இவர் சக்கரை வியாதியாலும் அவஸ்தைப்பட்டிருந்தார். அப்போது தான் இயக்குனர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தை வி ஏ துரை தயாரித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இந்த படம் பல விருதுகளையும் குவித்திருந்தது. இதனை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்க வேண்டும் என்று பாலாவிடம் தயாரிப்பாளர் விஏதுரை கேட்டிருந்தார்.
பாலா அலுவலகத்தின் முன் தர்ணா:
அதற்கு முன்பணம் ஆகவும் அவர் 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தார். ஆனால், பாலா ஒப்புக்கொண்டபடி படத்தை எடுக்காமல் இழுத்துக் கொண்டே சென்றிருந்தார். இதனால் கோபம் அடைந்த தயாரிப்பாளர் பாலாவிடம் பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால், பாலா தரவில்லை. இதனால் பாலாவின் அலுவலகத்திற்கு முன்பு தயாரிப்பாளர் வி ஏ துரை அவர்கள் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து தர்ணா போராட்டத்திலும் கூட இறங்கி இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதுகுறித்து கூட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பாலாவிடம் பேசி தீர்வு காணலாம், தர்ணாவை விடுங்கள் என்று சொன்னதால் அவரும் அங்கிருந்து சென்றார்.
துரையின் பரிதாப நிலை:
ஆனால், துரையின் முயற்சி வீண் தான் ஆனது. பாலா பணத்தை திருப்பி கொடுக்கவே இல்லை. இதனால் தயாரிப்பாளர் மனமுடைந்து போனார். இந்த நிலையில் மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தயாரிப்பாளர் தவிர்த்து இருக்கும் நிலை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தயாரிப்பாளர் துரை அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், காலில் ஆறாத ரணத்துடன் இருக்கிறார். தற்போது இவர் சாலிகிராமத்தில் தன்னுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருக்கிறார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல், மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவித்து இருக்கிறார்.
துரை வெளியிட்ட வீடியோ:
இதனால் இவர் சினிமாத்துறை நண்பர்களிடம் உதவி கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இவருடைய பரிதாப நிலையை குறித்து தயாரிப்பாளர் விடியல் ராஜு தயாரிப்பாளர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் மன்னன் தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் துரை அவர்கள் எஸ் பி முத்துராமரிடம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்துக்கு நம்பிக்கை உரியவராகவும் துரை இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் துரையின் நிலைமையைப் புரிந்து ரஜினியும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.