முத்தமிழ் பேரறிஞர் பட்டத்தை தவிர்த்தற்கு இதுதான் காரணம் என்று கவிஞர் வைரமுத்து கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் தமிழிசை சங்கத்தின் 50-ஆவது பொன்விழா நடைபெற்றிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டிருந்தார்.
இதில் இவருக்கு தமிழ் பெரும் கவி என்ற பட்டம் வழங்கி கௌரவித்து இருந்தார்கள். பின் இந்த விழாவில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலை அதிகம் காரணமாகத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பட்டத்தை வழங்க வர முடியவில்லை. அவருடைய சார்பில் என்னை வழங்க சொல்லி அறிவுறுத்தி இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
வைரமுத்துவுக்கு கிடைத்த பட்டம் :
இவரை தொடர்ந்து விழாவில் பேசிய வைரமுத்து, முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டம் தான் எனக்கு வழங்க இருந்தது. இது தெரிந்தவுடன் நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் முத்தமிழ் பெரும் கவி என்ற பட்டத்தை நானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன். எனக்கு விருதுகள் கொடுப்பதில் நிறைய சர்ச்சை ஏற்படுகிறது. காரணம், நான் சார்ந்த சமூகமும் ஒன்று.
வைரமுத்து சொன்னது :
பட்டம் வாங்குவது எளிதான ஒன்று தான். ஆனால், அதை அனுபவிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம் என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ என்னும் திரைப்படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் தான் பொழுது’ தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.
வைரமுத்து திரைப்பயணம் :
இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதிலும், முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வைரமுத்து வாங்கி இருக்கிறார்.
வைரமுத்து குறித்த தகவல்:
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய துறையிலுமே ஆளுமை படைத்தவராக விளங்குகிறார். அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாடு பாடநூல் மட்டுமல்லாமல் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கூட பாடங்களாக இடம்பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. சிங்கப்பூர் அரசின் கல்வி திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் ‘மரங்களைப் பாடுவேன்’ என்ற கவிதை தமிழ் பாடமாகவே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.