பிரபல சினிமா நடிகர் மற்றும் சண்டை கலைஞரான பொன்னம்பலம், நடிகர் விஜயகாந்த் தனக்கு செய்த உதவியை பற்றி சொன்ன தகவல் தான் இப்போது மீண்டும் வைரல் ஆகியுள்ளது. பொன்னம்பலம் முதலில் சண்டை பயிற்சியாளராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஒரு இரு காட்சிகளில் நடித்தார். பிறகு, தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தார். பின்னர் இயக்குனர், ஹீரோ, நகைச்சுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர் பொன்னம்பலம்.
மேலும், தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகர் பொன்னம்பலம் ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பொன்னம்பலம் பேட்டி:
அந்த வகையில் பொன்னம்பலம், நான் செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கேட்பதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் சென்று இருந்தேன். என்னை அழைத்து என்னோட கேரக்டர், படத்தின் கதை, பட்ஜெட் எல்லாம் சொல்லிவிட்டு, நான் சொல்ற சம்பளத்துக்கு ஓகே என்றால் படம் பண்ணலாம் என்றுஎஸ். ஏ. சந்திரசேகர் சார் சொன்னார். அப்போது கால் உடைந்து ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்த எனக்கு ரூபாய் 50,000 கொடுத்தால் போதும் என்று தோன்றியது. அந்த சமயத்தில், எனக்கு கொஞ்சம் கடன் இருந்ததால் அதையும் அடைத்தால் போதும் என்று நினைத்தேன்.
விஜயகாந்த் ரெக்கமண்ட்:
மேலும், எதுவும் பேசக்கூடாது. நான் என்ன சொல்றேனோ அதுதான் சம்பளம். விஜயகாந்த் வேறு உன்னை ரெகமெண்ட் பண்ணி இருக்காரு என்று செக் கவரை கொடுத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில் மெயின் வில்லன் ரோல் என்பதாலும், விஜயகாந்த் சார் சொன்னதாலும் ஓகே சொல்லிட்டு நானும் செக்கை வாங்கி விட்டேன். பின்பு வீட்டில் போய் பார்த்தால் அட்வான்ஸாக செக்கில் ரூபாய் 1 லட்சம் எழுதி இருந்தது. மேலும் ரூபாய் 2.75 லட்சம் சம்பளமாக அக்ரிமெண்டில் இருந்தது. அதையெல்லாம் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்து விட்டது என்று விஜயகாந்த் செய்த உதவியை மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார் பொன்னம்பலம்.
செந்தூரப்பாண்டி படம்:
1993 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படம் ‘செந்தூரப்பாண்டி’. இந்த படத்தில் யுவராணி, விஜயகுமார், மனோரமா, எஸ் எஸ் சந்திரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடுத்திருந்தனர். விஜயகாந்த் மற்றும் கௌதமி இருவரும் கேமியோ ரோலில் படத்தில் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்த இப்படம் விஜய்க்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. குறிப்பாக விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜயகாந்த் தான் சரியான ஆள் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி இந்த படத்தை உருவாக்கினார்.
உடல் நலப் பிரச்சினை:
சமீபத்தில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதோடு இவருக்கு அவரது அக்கா மகனே ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தற்போது பொன்னம்பலம் நல்லபடியாக இருந்து வருகிறார். நடிகர் விஜயகாந்த் தனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் என்றும், தன்னை சினிமாவில் உயர்த்தியது அவர்தான் என்றும், மேலும் நடிகர் விஜயகாந்தை தன் குரு என்றும் நடிகர் பொன்னம்பலம் எப்போதும் கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.