‘monkey chant’ எனும் இசை முறை – அதில் கெச்சக், கெச்சக் தமிழில் செக் செக் செக். அதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் இதான்.

0
1535
ponniyin
- Advertisement -

தமிழ் இலக்கியச்சூழலில் பண்டைக்கால ஆடல் முறைகளில் ‘குரவைக் கூத்து’ என்று ஒன்று இருந்திருக்கிறது. முருகப்பெருமானின் முன்னிலையில் பெண்கள் குறிஞ்சி மலர்களைச் சூடிக்கொண்டு கைகளைக் கோர்த்துக் கொண்டும் இடையோடு இணைந்தபடி தழுவியும் பிணைத்தும் ஆடுவது இந்த கூத்தின் முறை. பொழுதுபோக்கிற்காகவும் இறைவழிபாடாகவும் குறிப்பாக போர்க்காலத்தில் மக்களின் அச்சங்களைப் போக்கவும் இந்தக் கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

//அருங்கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக்கூடு இன் இயம் கறங்க நேர் நிறுத்துக்,
கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை//
என்று மதுரைக்காஞ்சியும் இந்தக் கூத்தின் இலக்கணத்தை எடுத்துரைக்கிறது.

- Advertisement -

‘பொன்னியின் செல்வனில் ‘ஆதித்த கரிகாலனின் அறிவுரைப்படி கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகையை அடையும் வந்தியத்தேவனுக்கு அவனது நண்பன் கடம்பூர் இளவரசன் கந்தமாறனின் உதவியால் இந்த குரவைக் கூத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கடம்பூர் மாளிகையில் நடக்கப்போகும் குரவைக் கூத்தானது தொடங்கும் நிகழ்வை இவ்வாறு விவரிக்கிறார் கல்கி.

-விளம்பரம்-

//குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்//

திரைப்படத்தில் ‘தேவராளன் ஆட்டம்’ என்ற பாடலின் மூலம் குரவைக் கூத்தினைக் காட்சிப் படுத்தியிருக்கிறார் மணிரத்னம்.
இளங்கோ கிருஷ்ணன் இந்தப் பாடலுக்கு வரிகளை எழுதியிருக்கிறார்.

குரவைக் கூத்து பெண்கள் மேடையேற பாடல் தொடங்குகிறது. அபாயம், கேடு, வேண்டுதல், பரிகாரம் என்று இந்தப் பாடல் பல படிநிலைகளைக் கடந்துச் செல்கிறது.

{செக்கச்செவ என படபடவென}
“மட்பற்ற கெட்டவுணரை வாட்பெற்று கெட்டழிக்கவே
சூழானது யுத்தம் – சூடானது ரத்தம்
போராடுதல் சித்தம் – தீராதினி சத்தம் //

எதிர்காலத்தில் வரப்போகும் ஏதோ ஒரு போருக்கான தயார் நிலையோடு பாடல் தொடங்குகிறது.

//கொத்துப்பறைக் கொட்டு, ரத்தசெரு வெட்டு
கொட்ட பகை வெட்டு, துட்டச்செயல் கட்டு//
(செரு – பகை, துட்டச்செயல் – தீமை செயல்)

//செறுவேட்டலை பேசிடுதே, வரு கேட்டினை ஓதிடுதே
ஒரு காட்டிடை தீயுளதே, அதையாற்றிடவா பெயலே//

சோழத் திருநாட்டில் வருங்காலத்தில் ஒரு கேடு வரவிருப்பதை உணர்த்தும் விதமாக வரிகள்.
அதைத் தடுக்க பறைகொட்டி பகையழித்து கோபம்கொண்டு தீமையழிக்க ஒரு வேண்டுதல் இந்த கூத்தின் மூலம் நிகழ்கிறது. நாட்டுக்கு வரப்போகும் தீமையை காட்டில் மூளும் தீயோடு ஒப்பிட்டு அதையாற்ற மழையை வேண்டுகிறார்கள் கூத்தாடுபவர்கள்.

இந்த வேண்டுதலின் உச்சமாக தொடர்ந்து குரவைக் கூத்தின் நாயகனான முருகனுக்குப் பாடும் வரிகள்.

‘செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே
செவ்வலரி தோளோனே, என் குடிய காப்போனே

கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருகா
துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்!’

(அலரி என்பது ஒரு வகையான மலர் – oleander என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது )

இப்பொழுது தேவராளன் அறிமுகம். சாமியாடி குறி சொல்லும் ஆளை தேவராளன் என்கின்றனர்.
தேவர் + ஆளன் – தெய்வம் அவன் மேல் ஆட்சி செய்து குறி சொல்வது.

தேவராளனிடம் வேண்டுதல் வைக்கப்படுகிறது.

“மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
கோப்புகழ் தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா?”

இந்த குறி கேட்கும் காட்சி புத்தகத்தில் ஒரு உரையாடலாக வருகிறது.

//“மழை பொழியுமா? வெள்ளம் பெருகுமா? நாடு செழிக்குமா? நினைத்த காரியம் கைகூடுமா?” என்று பூசாரி கேட்டான்.

“மழை பொழியும்! வெள்ளம் பெருகும்! நாடு செழிக்கும்! நினைத்த காரியம் கைகூடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை! துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்!…” என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான்.//

தேவராளனின் இந்தப் பதில் திரைப் பாடலில் “‘படுடா கொடடா எடடா வருவாய் தருவாய் உடனே

செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு'” வரியாக வைக்கப்பட்டிருக்கிறது.

நாடு செழிக்க தீமை விலக துர்க்கை பலி கேட்பதாகச் சொல்கிறான் தேவராளன்.

//“என்ன பலி வேண்டும்?” என்று பூசாரி கேட்டான்.

“கேட்டால் கொடுப்பீர்களா?” என்றான் வெறியாடியவன்.

“கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்! என்றான் பூசாரி.

“மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்!” என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்.//

பலி வேண்டும் என்று சொல்வது மன்னர் குலத்திலிருந்து ஒரு உயிர்.

“கொத்துப்பறை கொட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டத்தொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்த பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு”

பறை கொட்டி பகை கெட்டொழிய அரசனின் பட்டத்தில் இருக்கும் ஒருவனை பலி கேட்கிறாள் காளி.

“வேந்தர் முடி கேட்டாள் சூதனி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு”

(சூதனி – நிசும்ப சூதனி – சோழர்களின் குல தெய்வம் – பின்னாளில் வடபத்ரகாளியாக வழங்கப்படும் காவல் தெய்வம். )

இளையோன் ரத்தம் கேட்பது மூலம் இளவரசர்கள் இருவரில் ஒருவனின் உயிர் அங்கு பலியாகக் கேட்கப்படுகிறது. பின்னாளில் ஆதித்த கரிகாலனுக்கு வரப்போகும் ஆபத்தை இந்த தேவராளன் கூத்து முன்கூட்டியே சொல்கிறது.

சோழ நாட்டுக்கு சூழப்போகும் கேட்டிற்கு ஒரு முன்னெச்சரிக்கையோடு இந்த தேவராளன் ஆட்டம் நிறைவடைகிறது.

இந்த கூத்தைப் பற்றி சொல்லும்போது வேண்டுதலாக கல்கி இரண்டு வரிகளை எழுதுகிறார்.

“பசியும் பிணியும் பகையும் அழிக!
மழையும் வளமும் தனமும் பெருக”

இந்த வரிகள் சிலப்பதிகாரதத்தில் நிகழும் குரவைக் கூத்திலும் இளங்கோவடிகளால் சொல்லப்பட்டிருக்கிறது.

“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப்
பெருநில மன்ன னிருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்
மூதிற் பெண்டி ரோதையிற் பெயர”

ஆக, இந்த குரவைக் கூத்து சிலப்பதிகார காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.

குரவைக் கூத்து எப்படி நிகழும் என்பதற்கும் கல்கி விளக்கங்கள் தந்திருக்கிறார்.

//முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது.//

இதற்கு ஏற்றது போலவே பாடலுக்கு இசையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் வழக்கத்தில் இருக்கும் ஒரு வகையான இசைசார் வழிபாட்டு முறையான ‘monkey chant’ எனும் இசை முறையை ரஹ்மான் இந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.
ராவணனை வதம் செய்து சீதையை மீட்கும் ராமனுக்கு துணையாக வரும் வானரக் கூட்டம் பாடுவது போல இந்தக் கூத்து நிகழ்வதால் இதை ‘monkey chant’ என்று வழங்குகிறார்கள்.

ராமாயண கூத்தான இந்த ‘குரங்கு முழக்கம்’ – kecak (கெச்சக்) என்ற சொல்லைக்கொண்டு முழங்கப்படுகிறது.
இந்த kecak சொல்லுக்கு இணையாக இந்தப் பாடலில் “செக் செக் செக் செக் செக்
செக் செக் செக செகவென” வரி முதல் வரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் கால்பந்து போட்டிகளில் கறுப்பின வீரர்களுக்கு எதிராக நிறத்தைக் காரணமாக வைத்து வன்மமும் எள்ளலும் மிகுந்த சொற்களைப் பயன்படுத்தி அவர்கள் கவனத்தினை திசை திருப்புதலை monkey chanting என்று சொல்கிறார்கள்.

Advertisement