பாலாஜி, நித்யாவுடன் சேர வேண்டும் என்கிறார். நித்யாவோ அதற்குப் பச்சைக்கொடி காட்டாமல், `பார்க்கலாம்’ என்கிறார். யாஷிகா ஆனந்துடன் மஹத்துக்குக் காதல் என்றார்கள். அடுத்தநாளே காதலி `பிரச்சி’யுடனான மஹத்தின் காதல் பிரச்னை ஆகிவிட்டது. `பிக் பாஸ்’ இப்படிப் பலருடைய வாழ்க்கையில் புகுந்து பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறார். `அந்த ஷோ ஒளிபரப்பாகிறவரைக்கும் வாரத்துல ஏழு நாளும் சீரியலை இறக்குங்க!’ என உத்தரவிட்டது, ஒரு போட்டி சேனல். `இந்த 7 நாள் அசைன்மென்ட்தான் என்னோட பிரச்னைக்கும் காரணம்’ என்கிறார், `பூவே பூச்சூடவா’ சீரியல் ஹிரோயின் ரேஷ்மா. இவருக்கு என்ன பிரச்னையாம்?
அடிப்படையில நான் டான்ஸர். டான்ஸ் ஷோவுல கலந்துகிட்டது மூலமாதான் சீரியல் வாய்ப்பே கிடைச்சது. சீரியல்ல நடிக்கத் தொடங்கிய பிறகும்கூட, டான்ஸை விடாமத் தொடர்ந்தேன். அது எதுக்குனா, நடனத்தை ஒரு கலையா பார்த்ததைத் தாண்டி, சிறந்த உடற்பயிற்சியாகவும் நினைச்சேன். தொடர்ந்து டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கிறப்போ, என் உடல் எடை கூடாம, குறையாம சரியா இருந்தது.
அதனால ஜிம் போறது மாதிரியான விஷயங்களைவிட, ஆடிக்கிட்டி இருந்தாலே போதும்னு நினைச்சேன். அதனாலேயே சீரியல் ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல டான்ஸ் நிகழ்ச்சிகள் ஏதாவது இருந்தா, உடனே கமிட் ஆகிடுவேன். நிகழ்ச்சி எதுவும் இல்லையா, வீட்டுக்குள்ள டான்ஸ் பண்ணுவேன். ஏன்… சமயத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல கிடைக்கிற பிரேக் டைம்லகூட ஆடியிருக்கேனே!” என்றவரிடம், `இப்போ என்ன பிரச்னை?’ என்றோம்.
போன வருடம் பிக் பாஸ் ஒளிபரப்பாகி ரேட்டிங் எகிறியதால, இந்த வருடம் அது ஒளிபரப்பாகிற நேரத்துல போட்டியைச் சமாளிக்க, என்ன பண்ணலாம்னு யோசிச்ச மத்த சேனல் நிறுவனங்கள் அந்த நேரத்துல (இரவு ஒன்பது மணி) ஒளிபரப்பாகிற சீரியல்கள்லதான் ஏதோ பண்ணப்போறாங்கனு முதல்ல பேச்சுக் கிளம்பியது. ஃபைனலா, `அந்த டைம்ல ஒளிபரப்பாகிற சீரியல்களை வாரம் முழுக்க ஒளிபரப்புவதுனு முடிவாச்சு. `அப்பாடா, நம்ம சீரியல் ஒரு மணி நேரம் முன்னாடியே டெலிகாஸ்ட் ஆகிடும். அதனால, நாம தப்பிச்சோம்’னு நினைச்சேன். பிறகு என்ன நினைச்சாங்களோ, சேனல்ல இருந்து திடீர்னு கூப்பிட்டு `இந்த மாற்றத்தை எட்டு மணி சீரியலிலிருந்தே தொடங்கலாம்!’னு சொல்லிட்டாங்க.
மாசத்துல 15 நாள்கள் ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்தவளுக்கு, இப்போ எக்ஸ்ட்ரா 5 நாள்கள் ஷூட்டிங். இந்த 5 நாள்கள் எக்ஸ்ட்ரா வேலையால, ஷெட்யூல்ல ஏகப்பட்ட குழப்பமாகி, கடைசியில எனக்குப் பிடிச்ச டான்ஸைத்தான் தியாகம் பண்ணவேண்டியதாப் போயிடுச்சு. ஆமாங்க, கடந்த ரெண்டு மாசத்துல ஒருமுறைகூட என் கால் ஆடிப் பார்க்கலை.
20 நாள்கள் ஷூட்டிங், மீதி 10 நாள்ல சொந்த ஊரான கேரளாவுக்கும், வளர்ந்த ஊரான மதுரைக்கும் போயிட்டு வர்றேன். இப்படி டிராவல்லேயே 4 நாள்கள் போயிடுது. மீதி கிடைக்கிற 8 நாளும் நல்லாத் தூங்கவும், சாப்பிடவும் செய்றேன். விளைவு, உடல் எடைதான் 5 கிலோ அதிகமாகியிருக்கு.
பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிய இன்னும் 1 மாதம் இருக்கு. அந்த மிச்ச நாள்கள்ல இன்னும் எத்தனை கிலோ எடை கூடுமோ தெரியலை. வேலையும் அதிகமாகி, சாப்பாட்டையும் கன்ட்ரோல் பண்ண முடியலை. எல்லாம் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியால வந்தது!” என்கிறார், ரேஷ்மா.