தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித் . இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ‘பொன் விலங்கு’ படத்தில் முதன் முதலில் நடித்தார். இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அதன் பின்னர் இவர் ‘மறுமலர்ச்சி ‘ என்னும் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த வில்லனுக்கான ‘தமிழக அரசின் விருதையும் பெற்றார்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஞ்சித் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். சமீபத்தில் தான் இவர் நாடகக் காதலை எதிர்க்கும் வகையில் ‘கவுண்டம்பாளையம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
ரஞ்சித் குடும்பம்:
இந்தப் படத்தால் பல சர்ச்சைகள் எழுந்தது நாம் அறிந்ததே. இதற்கிடையே, நடிகர் ரஞ்சித் அவர்கள் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா மற்றும் ஆகாஷ் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து தனது முதல் மனைவி பிரியா ராமனை விவாகரத்து செய்த அதே ஆண்டு இவர் சீரியல் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித்:
அந்த மன வாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தனிமையில் பல ஆண்டுகள் இருந்த ரஞ்சித் மீண்டும் தனது முதல் மனைவியான நடிகை பிரியா ராமனுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து வாழ தொடங்கினார். தங்களின் விவாகரத்தை ரத்து செய்வதாக கூறி, அவர்களின் திருமண நாளிலேயே போட்டோவை இருவரும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் அவரது மனைவி தான் என்று ரஞ்சித் கூறியிருந்தார்.
ப்ரியா ராமன் பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ப்ரியா ராமன், அவருடைய கவுண்டம் பாளையம் படத்தை பார்த்து யாருமே விமர்சிக்கவில்லை. அவர் பேசிய கருத்தை வைத்துதான் சிலர் மாற்றி எழுதி விமர்சித்து இருந்தார்கள். அதுக்கும் என்னுடைய கணவர் விளக்கம் கொடுத்திருந்தார். அனைவருமே தவறு செய்வது இயல்பு தான். வாழ்க்கையில் கீழே விழுந்து தான் எழுவார்கள். யாராலும் ஓடிக்கொண்டே இருக்க முடியாது. மேடு பள்ளங்கள் அனைவருடைய வாழ்க்கையிலுமே இருக்கும். யாருமே தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டத்தை பார்க்காமல் இருக்கவே முடியாது.
மீண்டும் சேர காரணம்:
எப்படி கீழே விழுகிறோமோ அதே போல் மேலே எழுவதற்கான சக்தியையும் கடவுள் தருவார். என்னுடைய கணவர் தைரியசாலி, புத்திசாலி. ஆனால், அவருடைய ஒரே வீக் பாயிண்ட் நானும் என்னுடைய குழந்தைகளும் தான். அவர் வெளியில் எப்படி இருக்கிறாரோ அதே போல தான் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். நாங்கள் பிரியலாம் என்று முடிவு செய்து பிரிந்து விட்டோம். அதற்கு பிறகு அவர், தன்னை ஏற்றுக் கொள்ள சொல்லி கேட்டார். மறுபடியும் நாங்கள் வாழ தொடங்கினோம். அவர் ரொம்பவே வெளிப்படையானவர். அதனால் தான் அவரை புரிந்து கொண்டு குழந்தைகளுக்காக நாங்கள் மீண்டும் இணைந்தோம் என்று கூறி இருக்கிறார்.