தக் லைப் படத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். தற்போது படக்குழுவினர் மும்முராக ப்ரோமோஷன் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தக் லைஃப் படம்:
தக் லைஃப்’ என்னும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட Thug என்னும் பெயர் நடிகர் கமலஹாசனால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபலப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல ஏனெனில் Thugs என்றால் பொறுக்கிகள், மூர்க்கர்கள், போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றை ஆழமாக படித்தவர்கள் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris சென்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை அறிவார்கள்.

புதிய தமிழகம் அறிக்கை:
Thugs & Pindaris என்பவர்கள் ஔரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் நிலவிய நிலையற்ற தன்மையை பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளைக் கூட்டமாகும். அவர்கள் மதரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாகும். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது. வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி, அவர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிட்டு அவர்கள் உடைமைகளை கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரபிரதேச சம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களை போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.

ஏறக்குறைய நூறாண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியா எங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்கு பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்ச சொச்சங்களாக சமூகத்தில் பரவியும் பதுங்கியும் கிடக்கும் மூர்க்க, போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது. அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொலை செய்வது, நகை உடைமைகளை கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமவளக் கொல்லையில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, கௌரவ சாதிய கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளை கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான்.
அம்மூர்க்க, போக்கிரி, வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது. Thugs & Pindaris இந்திய சமூகத்தையே அச்சுறுத்திய, இன்னும் அச்சுறுத்தி வருகின்ற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வில் முறை. அதுபோன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல. எனவே மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு Thug Life என்னும் பெயரை தவிர்க்க வேண்டும் என கமல் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார்.






