கடந்த சில வாரங்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ, வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது.
பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்து பிரபல நடிகை ராதிகா, இந்தப் பிரச்சனை மலையாள சினிமாவில் மட்டும் கிடையாது தமிழ், தெலுங்கு என அனைத்து இடத்திலும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு இதுவரை பெண்கள் தான் குரல் கொடுத்து கொண்டுக் இருக்கிறார்கள். ஆண் நடிகர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவே இல்லை.
ராதிகா பேட்டி:
ஒருமுறை, மலையாள படம் ஒன்றின் படப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அது குறித்து விசாரித்த போது, அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இதனால் நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். அதன்பிறகு கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடித்தேன். கேரவனுக்குள் கேமரா வந்தால் அவ்வளவுதான் என்று சொன்னேன்.
சின்மயி குறித்து சொன்னது:
அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இங்கு சினிமா சிஸ்டமே தவறாக இருக்கிறது. சினிமாவைப் பற்றி தானே தவறாக சொல்வது, நம்மைப் பார்த்து நாமே துப்பி கொள்வதற்கு சமம். அதேபோல், பாடகி சின்மயி தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக புகார் அளித்தார். அவர் சொல்வது உண்மையா, இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவரை சமூக வலைத்தளத்தில் வசைப்பாடி அவருக்கு வேலை போனது. யார் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்? எந்தப் பெண் சொன்னாலும் ஏன் அந்தப் பெண்ணை யாரும் நம்புவதில்லை. சமீபத்தில், விஷால் இடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது யார் வேண்டுமானாலும் இப்படி புகார் அளிக்கலாம் என்று விஷால் சொன்னார்.
விஷால் குறித்து சொன்னது:
இதையெல்லாம் ஒரு பதிலே கிடையாது. யூடியூபில் யாரோ ஒருவன் நடிகர்கள் இப்படி எல்லாம் இருந்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்கிறான். நான் சொல்கிறேன், தைரியம் இருந்தால் அந்த நபரை போய் செருப்பால் அடிக்கட்டும். விஷால் பொதுச் செயலாளர் தானே, அவர் ஒரு ஆம்பளையாக இருந்தால் போய் அடிக்கட்டும், நானும் தொடப்பம் எடுத்துக் கொண்டு கூட வரேன். பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். எல்லோரும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்வோம் என்று கூறி இருந்தார்.
ராதிகா சொன்ன விஷயம்:
இப்படி ராதிகா சொன்ன விஷயம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அளித்த பேட்டியில் ராதிகா, நான் கேரவன் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருந்ததை பார்த்துவிட்டு நடிகர் மோகன்லால் எனக்கு போன் செய்து, இது என் செட்டில் நடந்ததா? என்று கேட்டார். உடனே நான், அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அது நீங்களோ, வேறு யாரோ என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த செட்டில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. நான் நடந்து போகும் போது பார்த்தேன். அது தவறான வீடியோவாக எனக்கு தெரிந்தது. அவங்க பாஷை எனக்கு புரியாததால் தமிழ் தெரிந்த நபரை கூப்பிட்டு திட்டி அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால், நான் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் என்னை இன்வெஸ்டிகேஷன் செய்யவில்லை என்று சொன்னதாக கூறி இருக்கிறார்.