சூப்பர் சிங்கர் விஷ்ணுவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10:
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு என்ற சிறுவன் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் பாடிய பாடல் அனைவரின் மனதையும் உருக்கி இருந்தது. இவருடைய குரலை கேட்டு பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், விஷ்ணு புதுக்கோட்டை மாவட்டத்தில் குருகுளாம்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 12 வயது.
விஷ்ணு குறித்த தகவல்:
இவருடைய அப்பா, அம்மா இருவருமே கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினம் 200 ரூபாய் தான் வருமானம். விஷ்ணு பாடும் நிகழ்ச்சியை கூட அவர்களால் பார்க்க முடியாது. காரணம், அவர்கள் வீட்டில் எந்த ஒரு டிவியுமே கிடையாது. இவருடைய இசை திறமையை பாராட்டி நடுவர்கள் மட்டும் இல்லாமல் பலருமே புகழ்ந்து பேசி இருந்தார்கள். பின் இசையமைப்பாளர் டி. இமான் அவர்கள் விஷ்ணுவின் உடைய இசை திறமையை பாராட்டி கீபோர்டை பரிசு அளித்தார். அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆனந்த், விஷ்ணுக்கு டிவியை கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு கிராமத்தின் ஊர்:
பிரியங்கா அவர்கள் கேஸ் அடுப்பை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடகர் மனோகரும், சித்ராவும் விஷ்ணுவின் உடைய படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து இருக்கிறார்கள். இதை அடுத்து விஷ்ணு கிராமத்தின் ஊர் மக்கள் பேட்டியில், விஷ்ணு அவனுக்காக மட்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கிராமத்துக்காக தான் அவர் இந்த மேடை ஏறி இருக்கிறார். எங்கள் ஊரில் தண்ணீரே கிடையாது. கிடைக்கும் தண்ணீருமே உப்பு தண்ணீர் தான்.
ராகவா லாரன்ஸ் செய்த உதவி:
அதை குடித்தால் பலருக்குமே பல உடல் வியாதிகள் வருகிறது. தண்ணீர் எடுக்க பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இந்த விஷயம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகரும், இயக்கருமான ராகவா லாரன்ஸ் திடீரென்று விஷ்ணுவின் கிராமத்திற்கு சென்று அங்கு தேவையான குடிதண்ணீர் ஆழ்துளை கிணறு ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் ராகவா லாரன்ஸை பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை அடுத்து பலருமே ராகா லாரன்ஸ் மற்றும் சிறுவன் விஷ்ணுவின் செயலை பாராட்டி வருகிறார்கள்.