கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனுடைய நோக்கமே கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த அமைப்பு சைக்கிள் பேரணி தொடங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 7ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இருந்து இரண்டு பிரிவுகளாக பிரிந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சைக்கிள் பேரணி தொடங்கி இருக்கிறார்கள். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் தல கோளத்தில் இருந்து தான் இந்த பேரணி தொடங்கி இருக்கிறார்கள்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை:
இந்த பேரணி மொத்தம் 25 நாட்கள் நடைபெறும். இந்த பேரணி 11 மாநிலங்களை சைக்கிளில் கடக்க இருக்கிறது. வரும் 31ஆம் தேதி அன்று உடன் இந்த பேரணி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைய இருக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சைக்கிள் பேரணியை பலருமே ஆதரவு தெரிவித்தும் பாராட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ரஜினி வீடியோ:
அதில் அவர், நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நம் நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம், மும்பையில் 26/11ல்
நடந்த கோர சம்பவம் தான் எடுத்துக்காட்டு. கிட்டத்தட்ட இந்த சம்பவத்தில் 175 பேர் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வு:
இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர் கடந்து மேற்கு வங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கிறார்கள். அவர்கள் உங்களின் பாதுகாப்பகுதிகளுக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் அமீர்கான், மாதவன் உட்பட பல பிரபலங்கள் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது ரஜினி அவர்கள் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.