மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர். 1937 ஆம் ஆண்டு பிறந்த இவர் அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை கல்வி படித்தவர். 30 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பலனாக இந்தியாவின் மிக முக்கிய அடையாளமாக, தன் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.

மேலும் இவர், இளைஞர்களுக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பது முதல், தொண்டு நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட சேவைகளைச் செய்து வந்தார். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பாக, 86 வயதான ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும், மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ICU பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரத்தன் டாடா பதிவு:
ஆனால், ரத்தன் டாடாவே தன் எக்ஸ் பக்கத்தில், தனது உடல்நிலை நன்றாகவே இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் டாடாவின் உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல் வெளியானது. மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

ரத்தன் டாடா மறைவு:
இவரின், மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதாரண மக்கள் என அனைவருமே அஞ்சலி செலுத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின் அவரின் உடல் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தற்போது ரத்தன் டாடாவின் உயில் குறித்த செய்திகள் தான் வெளியாகி உள்ளது. ரத்தன் டாடாவுக்கு சொத்துக்கள் அதிகம் என்பது நாம் அறிந்ததே.
ரத்தன் டாடா உயில்:
அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் இறப்பதற்கு முன் உயிலில் எழுதி இருக்கிறார். அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு இருக்கிறது . முதலில் டாடாவின் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும் பகுதி டாடா அறக்கட்டளைக்குச் செல்லும். பின் அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரின் மற்றும் டீன்னா ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.

வளர்ப்பு பிராணிக்கும் சொத்து:
அதைத்தொடர்ந்து டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நோயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார். பின், தன்னிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளாராம். தற்போது இந்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.






