வயநாடு நிலச்சரிவு பேரிடர் உதவிக்கு நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் வந்ததற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே புரட்டி போட்டு இருக்கிறது. கேரளாவின் வயநாடு மாவட்டம் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரழிவால் இதுவரை 390க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இன்னும் இந்த இயற்கை பேரழிவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயற்கை பேரழிவு இந்த முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த பேரழிவு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. NDRF, ராணுவம், உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பல அமைப்புகள் இரவு பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆறு நாட்களாக அவர்கள் நிலச்சரிவில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர், பிரபலங்கள் என பலரும் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
வயநாடு நிலச்சரிவு சம்பவம்:
அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருந்தார். தமிழகம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். அந்த வகையில் நடிகர் மோகன்லாலும் ராணுவ சீருடையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மேலும், அவர் நிவாரண தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
#WATCH | Actor Mohanlal who is a Lieutenant Colonel in the Territorial Army, reached the landslide-hit Mundakkai area in Wayanad.#Kerala pic.twitter.com/feEpYNZa5B
— ANI (@ANI) August 3, 2024
ராணுவ உடையில் உதவி செய்த மோகன்லால்:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மோகன்லால், நான் 16 ஆண்டுகளாக ராணுவ படையில் இருக்கிறேன். என்னுடைய குழுவிடம் தொடர்ந்து ஆலோசனைகள் பெற்று வருகிறேன். எங்களுடைய படையை சேர்ந்த 40 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த பாதிப்பில் இழந்ததை நம்மால் திரும்பப் பெற முடியாது. மீட்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். இப்படி நடிகர் மோகன்லால் ராணுவ உடை அணிந்து பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ததை பலருமே பாராட்டி இருக்கும் நிலையில் சிலர், மோகன்லால் ராணுவ உடையில் ஏன் வந்தார்? என்ற கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.
மோகன்லால் குறித்த தகவல்:
நடிகர் மோகன்லாலுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிக ஆசை. ஆனால், இவரால் இந்திய ராணுவத்தில் நேரடியாக சேர முடியவில்லை. இதற்காக பகுதி நேர தன்னார்வலர்களை கொண்டு செயல்படும் TERRITORIAL ARMYல் சேர மோகன்லால் முயற்சி செய்தார். ஆனால், அதில் சேர்வதற்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அப்போது மோகன்லாலுக்கு 42 வயது. இருந்தாலுமே அவரின் நல்லெண்ணத்தை பாராட்டி இளம் தலைமுறைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் TERRITORIAL ARMYல் சில விதிகளை தளர்த்து மோகன்லாலுக்கு கவுரவ அடிப்படையில் கண்ணூர் பகுதியில் 122-வது படைப்பிரிவின் லெப்டினட் கர்னல் பொறுப்பை ராணுவ தளபதி தீபக் கபூர் தான் மோகன்லாலுக்கு வழங்கியிருந்தார்.
மோகன்லால் ராணுவ உடை குறித்த விளக்கம்:
அதன் பிறகு மோகன்லால் ராணுவ பயிற்சிகளையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். லெப்டினன்ட் கர்னல் மட்டுமில்லாமல் இவர் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், எம் எஸ் தோனியும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆர்மியின் மூலம் தான் மோகன்லால் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.