கன்னட மொழியில் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.
காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார் ரிசப் செட்டி. முதல் பாகத்திலுமே இவர் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஹோம்பலே ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
காந்தாரா படத்தின் உடைய முடிவிலிருந்து இந்த கதை தொடங்குகிறது. கதாநாயகன் எப்படி தெய்வமாக மாறினான்? எப்படி பூமியில் மறைந்து போனான்? அவர்களுடைய தெய்வத்தின் கதை என்ன? என்பதை ஒரு சிறுவனுக்கு சொல்லப்படுகிறது. இதனால் கதை முன்னோர்களின் காலத்திற்கு கொண்டு செல்கிறார்கள். கர்நாடகாவின் தெற்கு பகுதியில் அடர்ந்த காடு இருக்கிறது. அங்கு மூன்று பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் காந்தாரா பழங்குடியினர் தான் ரொம்ப சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் காட்டையும் பாதுகாக்கின்றார்கள், தங்கள் தெய்வமான சிவனையும் காத்து வருகிறார்கள்.
அவர்களுடைய தலைவர் தான் ரிசப் செட்டி. இவர் தெய்வீக சக்தி கொண்டவர். இவர்களின் தெய்வத்தையும் காட்டையும் தங்களுடைய வசப்படுத்த பிஞ்சர்லா பழங்குடியினர் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. இன்னொரு பக்கம் காந்தாரா காட்டை ஆக்கிரமித்து அதில் உள்ள வாசனை திரவியங்களை கொள்ளையடித்து வியாபாரம் செய்ய பங்ரா ராஜ்ஜியத்தின் மன்னன் விஜயேந்திரன் முயற்சிக்கிறார். ஆனால், அவனை தெய்வம் கொன்று விடுகிறது. அவருடைய மகன் தான் ஜெயராம். பின் வளர்ந்து அந்த ராஜ்ஜியத்தை ஜெயராம் ஆளுகிறார்.

இவருடைய மகன் குல்ஷன் தேவய்யா, மகள் ருக்மணி. ஜெயராமுக்கு வயதாகி விட்டதால் அதனுடைய ராஜ்ஜிய பொறுப்பை குல்ஷன் தேவய்யாவிடம் ஒப்படைக்கிறார். ஆனால், அவர் சரியாக ஆட்சி செய்யாமல் எப்போதுமே போதையில் மூழ்கி இருக்கிறார். இதனால் ஜெயராம், அவருடைய மகள் ருக்மணியும் சேர்ந்து நாட்டை கவனித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் காந்தாரா காட்டில் உள்ள சிவபூந்தோட்டம் அனைவரின் கண்ணும் படுகிறது. ஆனால், அதற்குள் சென்று வெளியே வர முடியாது. அதற்குள் செல்ல வேண்டும் என்று ருக்மணியும், ஜெயராமின் மகள் இருவருமே நினைக்கிறார்கள். ஒரு முறை ஜெயராமின் மகன் செல்லும்போது தெய்வம் அவனை வேட்டையாடுகிறது. ஆனால், காந்தாரா மக்கள் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள்.
அதில் ஒரு வீரன் அவர்களிடம் பிடிபடுகிறான். அவர் உதவியுடன் ராஜ்யத்திற்குள் வருகிறார் ரிஷப் செட்டி. மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், சந்தை பார்த்த எல்லாத்தையும் பார்த்து ரிஷப் செட்டி வியப்படைகிறார்கள். தங்கள் காட்டிலிருந்து தான் எல்லா பொருள்களையும் கொண்டு வந்து வர்த்தகம் செய்வது தெரிந்து கொண்டு இவர்கள் தொழிலை தொடங்குகிறார்கள். இதற்கு இளவரசி ருக்மணியும் ஒத்துக்கொள்கிறார். அப்போதுதான் ருக்மணிக்கும் ரிஷப் செட்டிக்கும் இடையே காதல் உருவாகிறது.
இந்த சமயத்தில் ஜெயராமனின் மகன் ஒரு படையுடன் காட்டிற்குள் சென்று காந்தாரப் பழங்குடியினர் அனைவரையுமே கொன்று விடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ரிசப் செட்டி தன்னுடைய மக்களை பாதுகாக்க என்ன செய்தார்? சிவன் அவருக்குள் எப்படி வந்தார்? ஜெயராமன் மகனின் நிலைமை என்ன? ஜெயராம் என்ன செய்தார்? ருக்மணி இன்னொரு அம்சம் என்ன? இந்த பிரச்சினைகள் எல்லாம் ரிஷப் செட்டி எப்படி சமாளித்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. ஆரம்பத்தில் காந்தாரா படத்தின் உடைய முடிவில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். அதற்குப்பின் கடந்த காலத்திற்கு கதை நகர்கிறது. காந்தாரா மக்கள் எப்படி இருந்தார்கள்? என்ன செய்தார்கள்? அவர்களுடைய கடவுள் சிறப்பம்சம் என்ன? என்பதையெல்லாம் காண்பிக்கிறார்கள்.
அதாவது, காந்தாரா மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையே நடந்த சண்டை கலவரத்தை எல்லாம் தெளிவாக காண்பித்து இருக்கிறார்கள். காந்தாரா காட்டை அடைய நான்கு பக்கமும் எதிரிகள் தாக்கும் போது ஹீரோ ரிசப் ஷெட்டி பாதுகாப்பு கவசமாக இருப்பதை பார்க்கும்போது புல்லரிக்கும் வகையில் இருக்கிறது. ஹீரோ ஆக்சன், காதல், எமோஷனல் என அனைத்திலுமே ஸ்கோர் செய்து இருக்கிறார். தீயவர்களிடம் இருந்து நல்லவர்களை காக்க கடவுள் ஏதோ ஒரு வடிவத்தில் வருவார் என்பதை இந்த படத்தில் இயக்குனர் ஆழமாக சொல்லியிருக்கிறார்.
முதல் பாதி முழுவதுமே காந்தாரா மக்களுடைய வாழ்விற்கான போராட்டம், மன்னர் ஆட்சி என்று செல்கிறது. இடைவெளிக்கு பிறகு ஆக்சன்அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் தூள். அதிலும் காந்தாரா வரும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. இருந்தாலும் தெய்வம் தொடர்பான காட்சிகள் எல்லாம் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக காண்பித்திருக்கலாம். ஜெயராம் மகன் உடைய காட்சிகள் எல்லாம் சளிப்படையை வைத்திருக்கிறது. முதல் பாதி நீளத்தை குறைத்திருக்கலாம்.
இரண்டாம் பாதி முழுவதுமே பழிவாங்கல் நோக்கத்தோடு தான் கதை செல்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் காந்தாரா படம் நன்றாக இருக்கிறது. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இயக்குனர் கொடுத்து இருக்கிறார். ஆனால், கதைக்களம் கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். தேவையற்ற காட்சிகளை காண்பித்து நேரத்தை வீணடித்து இருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள். இருந்தாலுமே எல்லோரும் சேர்ந்து பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:
ரிஷப்செட்டி நடிப்பு
கதைக்களம்
கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது
இரண்டாம் பாதி ஆக்சன்
படத்தில் டெக்னிக்கல் விஷயம் நன்றாக இருக்கிறது
குறை:
முதல் பாதியின் நீளத்தை குறைத்து இருக்கலாம்
தேவையற்ற சில காட்சிகளை நீக்கி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
மொத்தத்தில் காந்தாரா சாப்டர் 1- வித்தியாசமான முயற்சி






