வடக்குப்பட்டி ராமசாமி படம் ககுறித்த சர்ச்சைக்கு சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம்,கிக் போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா ,நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போது நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறிய வசனம் பெரும் சர்ச்சையானது. அதிலும் பொங்கல் பண்டிகையின் போது ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என்று பேசிய பொங்கல் வாழ்த்து தெரிவித்த வீடியோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதனால் அந்த பதிவையே நீக்கினார் சந்தானம். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு விமர்சனங்களையும் பெற்று இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சந்தானம் ‘ இந்தப் படத்தில், நான் ஹீரோ என்றாலும் அனைவரும் சிறப்பாக நடித்து சிரிக்க வைத்தார்கள். ஆத்திகராகப் பார்த்தால் இது சாமி படம், நாத்திகராகப் பார்த்தால், இது பகுத்தறிவு பேசும் படம். கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் பார்க்க வேண்டாம் என்பதையும் கடவுள் பெயரை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.
நான் ஆன்மிகவாதிதான். எங்கள் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. காமெடியும் சிரிப்பும் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. அடுத்தும் இந்தப் படத்தின் இயக்குநருடன் நடிக்க இருக்கிறேன். அதற்கும் கவுண்டமணி சாரோட வசனத்தையே தலைப்பாக வைத்துள்ளோம்’ என்று கூறி உள்ளார்.
ஏற்கனவே இதுகுறித்து விளக்கமளித்த சந்தானம் ‘படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அப்போது நான் தயாரிப்பாளிடம், எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்திற்கான ப்ரோமோஷன் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இந்த படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது’ என்று கூறி இருந்தார் என்பதும்குறிப்பிடத்தக்கது.