தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம் குறித்து உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பின் போலிசார் இரவு முழுவதும் அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளார்கள். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவருக்கின்றனர். மேலும், சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. மேலும், இந்த வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது. டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக சிபிசிஐடி விசாரணையை கையிலெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை தொடங்கப்பட்டது. ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதாகவும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டு உள்ளத்தையும் தெரிவித்தார். அதோடு தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த அச்சத்துடனேயே இருந்தார். காவல்நிலையத்தில் இருந்த சில காவலர்கள் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் செயலில் ஈடுபட்டனர்.

பிறகு திடீரென்று வாக்குமூலம் அளித்த ரேவதி வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். பிறகு அவரிடம் மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது என்று கூறப்படுகிறது.ரேவதியின் செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் தான் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ், நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதியை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Advertisement