பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவு குறித்து சீரியல் நடிகர் ராஜேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற மிகச்சிறந்த குணசித்திர நடிகர் தான் டெல்லி கணேஷ். விமானப்படையில் பணியாற்றி வந்த டெல்லி கணேஷ், மேடை நாடகங்கள் மீது உள்ள காதலின் காரணமாக தன்னுடைய பணியில் இருந்து விடுபட்டு டெல்லியை சேர்ந்த ஒரு நாடக சபாவின் சார்பாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
பின்னாளில் அவருக்கு டெல்லி கணேஷ் என்று பெயர் வரவும் காரணமும் இதுதான். அதற்குப் பிறகு கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பணத்தை தொடங்கிய டெல்லி கணேஷ், தனது 80 வது வயது வரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று தன்னிடம் கொடுக்கப்படும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக மிக நேர்த்தியாக செயல்படுத்தும் திறன் கொண்டவர் டெல்லி கணேஷ் என்றால் அது மிகையாகாது.
டெல்லி கணேஷ் மறைவு:
இந்நிலையில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி இரவு உறங்கச் சென்ற டெல்லி கணேஷின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரின் மறைவு செய்தியை கேட்டு திரை உலகமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. அவரோடு பணியாற்றிய பெரிய பெரிய நடிகர்களும் டெல்லி கணேஷ் மறைவிற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் குடும்பத்தாருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கணேஷ் இறுதி சடங்கு:
இன்று நவம்பர் 11ஆம் தேதி அவருடைய இறுதி ஊர்வலமானது நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு இடையே சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆடுகளம்’ என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்தத் தொடரின் ஒளிபரப்பு இன்னும் தொடங்காத நிலையில், அவரது மரணம் தொடரில் உடன் நடித்தவர்களை தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகர் ராஜேந்திரன், டெல்லி கணேஷ் சார் அந்த சீரியல்ல எனக்கு அப்பாவா நடிச்சுக்கிட்டு இருந்தாரு.
ராஜேந்திரன் பேட்டி:
அவருக்கு மனைவியாக சச்சுமா நடிச்சாங்க. என் பிள்ளைகளோட காதல், கல்யாணம் முதலான விஷயங்கள்ல எனக்கு தெரியாம அவங்களுக்கு சப்போர்ட்டா இருப்பார். நல்ல கதை. சூட் தொடங்கி சில எபிசோடுகள் எடுத்துட்டாங்க. பத்து நாள் முன்னாடி கூட என்கிட்ட பேசினார். ‘என்ன ராஜேந்திரா திரும்ப ஷூட்டிங் எப்பவாம்? வீட்ல போர் அடிக்குது. ஷூட்டிங் போனால் ஆச்சும் நேரம் போறது தெரியாம இருக்கும்’னு சொன்னார். ஃப்ரீயா இருந்தா ஆத்து பக்கம் வா ன்னு கூப்பிட்டார்.
டெல்லி கணேஷ் குறித்து சொன்னது:
சில வேலைகளால் என்னால் போக முடியவில்லை. என்னுடைய வீடு அவருடைய வீடும் பத்து நிமிஷம் தூரம் தான். நான் ஒரு எட்டு போயிட்டு வந்து இருக்கலாம். அவருக்கு அஞ்சலி செலுத்த நானும் என் மனைவி ஸ்ஸ்ரீலேகாவும் போனோம். அவரின் மனைவி, ‘ உங்க முதல் கதாநாயகி வந்திருக்காங்க பாருங்கன்’னு சொல்லி அழுதாங்க. என்னுடைய மனைவி ஸ்ரீலேகா தான் அவருடைய முதல் நாடகமான ‘மீண்டும் சுப்ரபாரதம்’ ல அவருக்கு ஜோடியாக நடிச்சாங்க. அவருடைய நாடகக் குழுவுல ஸ்ரீலேகா சேர்ந்த பிறகு தான் நான் சேர்ந்தேன். அதற்குப் பிறகு நானும் ஸ்ரீலேகாவும் திருமணம் செய்து கொண்டதில் அவருடைய நாடக கம்பெனிக்கு பெரிய பங்கு இருக்கிறது என்று எமோஷனலாக கூறியுள்ளார்