கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்க வேண்டுமென்று தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். பின் அரசாங்கமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது. மேலும், படப்பிடிப்பின் போது சில நிபந்தனைகளையும் விதித்து உள்ளது. அதில் அவர்கள் கூறி இருப்பது, சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த கூடாது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடத்தில் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு பிறகு தவறாமல் மாஸ்க் அணியவேண்டும். படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரும் வாகனங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபரை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
படப்பிடிப்பு இடத்தில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சிஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கூறிய விதிகளை தவறாமல் கடைபிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்ட பிறகு தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.