இங்கிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்ற இந்தியா
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன் பேசிய இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், அந்த தொடர் இந்திய அணிக்கு பல முக்கியமான பாடங்களை கற்றுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு சூழலில் எப்படி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து வீரர்களுக்கு தெளிவான புரிதல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

"வெளிநாட்டு சூழலுக்கு விரைவாக மாற வேண்டும்"
ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "இங்கிலாந்தில் எங்களுக்கு கடினமான தொடர் அமைந்தது. ஆனால் அதில் இருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை கற்றுக்கொண்டோம். ஒரு அணியாக இன்னும் என்னென்ன விஷயங்களில் முன்னேற வேண்டும், போட்டி சூழ்நிலைக்கு எப்படி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டோம். சிலர் முதல் முறையாக இந்த மாதிரியான வெளிநாட்டு சூழலில் விளையாடுகிறார்கள். எவ்வளவு விரைவாக நாம் அதற்கு ஏற்ப மாறுகிறோமோ, அவ்வளவு விரைவாக வெற்றிகளும் கிடைக்கும்," என்றார்.
"தோல்வியை பயப்படக் கூடாது"
இளம் வீரர்கள் தோல்வியை நினைத்து விளையாடக் கூடாது என்றும், அப்படி நினைத்தால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்றும் ஐயர் தெரிவித்தார். "தோல்வி பற்றிய பயம் மனதில் இருந்தால், வீரர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே விளையாடுவார்கள். அந்த பயம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடினால்தான் அவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும்," என்று கூறினார்.

அணி இன்னும் நெருக்கமாகியுள்ளது
இங்கிலாந்து தொடரில் முடிவுகள் சாதகமாக அமையவில்லை என்றாலும், அது இந்திய வீரர்களை இன்னும் நெருக்கமாக இணைத்துள்ளதாக ஐயர் குறிப்பிட்டார். "தோல்விக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிறைய விவாதித்தோம். இனி ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும், எந்த விஷயங்களில் முன்னேற்றம் தேவை என்பதைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான சவால்கள் அடிக்கடி கிடைக்காது. அதனால் இதிலிருந்து விரைவாக மீண்டு வந்தால் இன்னும் வலுவான அணியாக மாற முடியும்," என்றார்.
காயத்திலிருந்து மீண்ட அனுபவம் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது
தனது காயம் குறித்து பேசிய ஐயர், அந்த காலகட்டம் தன்னை மனதளவில் மிகவும் வலிமையான வீரராக மாற்றியதாக தெரிவித்தார். "காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது. எந்த சவாலாக இருந்தாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது. ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். ஆனால் அவற்றை விரைவாக பகுப்பாய்வு செய்து சரிசெய்வதே முக்கியம்," என்று கூறினார்.
மீது முழு நம்பிக்கை
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய ஐயர், அவருக்கு அதிக ஆலோசனை தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார். "டி20 தொடருக்குப் பிறகு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் அவர் தனது தவறுகளை சரிசெய்திருப்பார் என்று நம்புகிறேன். இளம் வீரர்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்து இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நான் தனியாக அதிக ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.






