தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிம்பு திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரை தென்னிந்திய சினிமா உலகின் சர்ச்சை நாயகன் என்று சொல்வார்கள். ஏன்னா, அந்த அளவிற்கு இவரைக் குறித்து சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்களும் வதந்திகளும் வந்தவண்ணம் இருக்கும். என்னதான் இவரை குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் வந்தாலும் சிம்புவுக்கு இன்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சிம்பு அவர்கள் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தான் இந்த மாநாடு படம் மீண்டும் துவங்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி , டேனியல் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்த நிலையில் மாநாடு படம் வெளியீடு தேதி தள்ளிப் போயிருப்பதாக மாநாடு பட குழுவினர் அறிக்கை ஒன்று அறிவித்துள்ளார்கள்.
அதில் அவர்கள் கூறி இருப்பது, நீடித்த கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறது மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக படம் வெளியிட அனைத்து வேலைகளும் செய்யப்பட்டது. படம் யாரோடும் போட்டி போடுவதற்காக வெளியிடவில்லை. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்து தான் தீபாவளிக்கு வெளியிட முடிவு எடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப்பார்த்தால் அது வியாபார புத்திசாலித்தனம் அல்ல. மாநாடு படம் நன்றாக வந்துள்ளது. அதன் மீது நம்பிக்கை உள்ளது. என்னை நம்பி பட வியாபாரம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.
அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். யாரும் நஷ்டம் அடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் படமும் அதன் வெற்றியையும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளிக்கு வெளியாகவில்லை. மேலும், தீபாவளி அன்று வெளியாகும் படங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். எங்கள் முடிவை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார். ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் சிம்புவின் மாநாடு படமும் தீபாவளி என்று வெளியாகுவதாக இருந்தது. ரஜினி, சிம்பு படங்கள் ஒன்றுக்கொன்று ஒன்று மோதும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.