பல்லாயிரக்கணக்கான பாடலின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை மகிழ்வித்த பின்னணி பாடகி சொர்ணலதா. இவர் தன்னுடைய 14 வயதில் பின்னணிப் பாடகி ஆனார். கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலை பாடியதற்கு இவர் தேசிய விருது வென்றிருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் 21 வயது தான். அதனை தொடர்ந்து சொர்ணலதா பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து பல விருதுகளை வென்றிருக்கிறார். மேலும், இவர் பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,மாசிமாசம் ஆளான பொண்ணு,ஆட்டமா தேரோட்டமா,என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, மாலையில் யாரோ மனதோடு பேச,போவோமா ஊர்கோலம்,என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், முக்காலா முக்காபுலா, அக்கடான்னு நாங்க எடை போட்டா, குச்சி குச்சி ராக்கம்மா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி குறுகிய காலகட்டத்திலேயே இசையில் புகழின் உச்சிக்கு சென்றவர் சொர்ணலதா. ஆனால், இவர் 37 வயதிலேயே மரணமடைந்தார். அவரின் இறப்பு இன்று வரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இன்று வரை அவர் இல்லாத துயரில் இருந்து மீளாமல் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சொர்ணலதாவின் நினைவு தினம். இந்நிலையில் அவருடன் பழகிய பல நினைவுகளை அவருடைய தோழியும் பின்னணி பாடகியுமான சுனந்தா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சொர்ணலதாவுக்கு இசைத்துறையில் நான் தான் சீனியர். 1980-களின் இறுதியில் இருவருமே சினிமா ரெக்கார்டிங் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக பாடிக் கொண்டிருந்தோம்.
சொர்ணலதா பிறந்தநாள் குறித்து தோழி அளித்த பேட்டி:
ஒரு டிவோஷனல் மேடை நிகழ்ச்சியில் தான் நான் முதன் முதலில் சொர்ணலதாவை பார்த்தேன். அதை தொடர்ந்து பல ரெக்கார்டிங் மேடை நிகழ்ச்சிகளில் இருவரும் சந்தித்து எங்கள் உடைய நட்பு வளர்ந்தது. பின் நாங்கள் பாடல்கள் பற்றி நிறைய பேசி விவாதிப்போம். நான் அமைதி டைப். ஆனால், என்னையே அசர வைக்கும் அளவுக்கு அமைதியானவர் சொர்ணா. சொல்லப்போனால், நாங்கள் சிரித்துப் பேசிய காலங்கள் எல்லாம் இன்றும் மறக்க முடியாதவை. எங்கள் இருவருக்குமே பூர்வீகம் கேரளா தான். நாங்கள் அதிகம் மலையாளத்தில் தான் பேசிக் கொள்வோம். மேலும், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மற்றும் இசைத் துறையில் நிறைய மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது.
சொர்ணலதா-சுனந்தா நட்பு:
எனக்கு வாய்ப்புகள் குறைந்ததும் குடும்பம், மேடை நிகழ்ச்சி என்று இருந்து விட்டேன். நாங்கள் இருவரும் சந்திப்பதும் பேசுவதும் குறைந்துவிட்டது. பின் சொர்ணலதா சிலகாலம் என்ன ஆனார்? என்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தபோது என் பக்கத்திலிருந்தவர் தான் சொர்ணலதா இறந்துவிட்டார் என்று சொன்னார். நான் நம்பவேயில்லை. வேறு யாரோ இருப்பாங்க என்று நான் சொன்னேன். ஆனால், என் தோழி சொர்ணலதா தான் என்று உறுதியாகத் தெரிந்ததும் மனம் உடைந்து போய் விட்டேன். அப்போது என்னால் பாட முடியாமல் மன வேதனையில் கிளம்பிவிட்டேன்.
சொர்ணலதா இறந்த செய்தி:
பின் அவங்க உடலுக்கு அஞ்சலி செலுத்த போனேன். சொர்ணலதா ரொம்ப அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற மாதிரி இருந்தது. சொர்ணலதா வாழ்க்கை ரொம்ப அமைதியாக காற்றில் வரும் கீதமாக ஆகிவிட்டதே என்று நினைத்து வேதனைப்பட்டேன். சொர்ணலதாவிற்கு எல்லாமே அவருடைய அக்காதான். அம்மா இறந்த பிறகு அவருடைய அக்கா தான் சொர்ணலதாவை பார்த்துக் கொண்டார். சொர்ணலதா உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்துவிட்டதாக அவங்க அக்கா கூறினார். அவருடைய இழப்பை இன்றும் ஈடுகட்ட முடியவில்லை.
சொர்ணா இசைத்துறை:
சொர்ணா இசைத்துறையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு போனவர். மெலோடி, குத்து பாட்டு என எல்லா வகையிலும் சிறப்பாக பாடியவர். இசையமைப்பாளர்கள் சொல்லிக்கொடுக்கிறதை சீக்கிரமாகவே உள்வாங்கிக் கொள்பவர்கள். தனக்குள் என்ன சோகம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் சொர்ணலதா. திருமணம் கூட செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவங்க பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் எனக்கு வரும் என்று கண் கலங்கியபடி கூறியிருக்கிறார்.