தன்னுடைய மனைவிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து முதன் முதலாக மனம் திறந்து இயக்குனர் ராஜமௌலி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமௌலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது சினிமா உலகில் ராஜமௌலியின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் ஆவணப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தை ராஜமௌலியின் பிறந்த நாள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் மொத்தம் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் கொண்டது. பிரபல விமர்சகர் அனுபமா சோப்ரா வாய்ஸ் ஓவரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘மார்டன் மாஸ்டர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதில் ராஜமௌலி எப்படி இந்திய சினிமாவில் புரட்சியை செய்திருக்கிறார், சர்வதேச சினிமாவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார், திரைக்குப் பின்னால் ராஜமவுலி எப்படி, அவருடைய பயணம் என்ன, பிரபலங்களின் பேட்டி, ராஜமௌலி குறித்து பலரும் தெரியாத விஷயங்களையும் காண்பித்திருக்கிறார்கள்.
ராஜமௌலி பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜமௌலி தன்னுடைய மனைவி குறித்து சொன்னது, என்னுடைய வாழ்க்கையே உலுக்கிய மோசமான சம்பவம் என்றால் என் மனைவியின் விபத்து தான். மாவீரன் படத்தினுடைய படப்பிடிப்பின் போதுதான் இந்த சம்பவம் நடந்தது. அந்த சமயத்தில் நானும் என் மனைவி உடன் தான் இருந்தேன். அவருக்கு அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. நான் ரொம்பவே உடைந்து போய் அழுது கொண்டே இருந்தேன்.
மனைவிக்கு ஏற்பட்ட விபத்து:
மருத்துவமனைக்கு போகலாம் என்று நினைத்தால் 60 கிமீ தொலைவில் இருந்தது. அதனால் ரொம்பவே கதறி கதறி அழுதேன். அப்போது கடவுளிடம் வேண்டி பிரார்த்தனை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் நான் அதை செய்யாமல் எனக்கு தெரிந்த மருத்துவர்களுக்கு எல்லாம் போன் செய்து உதவி கேட்டிருந்தேன். ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே, கர்மா யோகம்’ இதைத்தான் நான் என்னுடைய வாழ்க்கையாக கொண்டிருக்கிறேன். சினிமாதான் எனக்கு எல்லாம். சினிமா தான் என்னுடைய கடவுள்.
கடவுள் நம்பிக்கை குறித்து சொன்னது:
ஆரம்பத்தில் நான், இந்து மதம் சார்ந்த புராணங்கள் எல்லாம் நிறைய படித்திருக்கிறேன். பின் கிறிஸ்தவ மதம் சார்ந்த புனித நூல்களையும் படித்தேன். அப்போது நான் ஆத்திகனாக தான் இருந்தேன். அதற்கு பிறகுதான் எழுத்தாளர் ‘Ayn Rand’ அவர்களுடைய நூலைப் படித்தேன். அவருடைய தத்துவங்கள் தான் என்னை நாத்திகவாதியாக மாற்றியது. மதம் மனிதர்களை சுரண்டுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் நான் மதத்தை விட்டு தள்ளியே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ராஜமௌலி திரைப்பயணம்:
மேலும், இவர் ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ என்ற படத்தை தான் முதலில் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சிம்ஹத்ரி, சை, சத்ரபதி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது ‘மாவீரன்’ படம் தான். பின் இவர் இயக்கிய பாகுபலி படம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த RRR படம் ‘ஆஸ்கர் விருதை’ வாங்கி இருந்தது. தற்போது ராஜமௌலி- மகேஷ்பாபு கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் ராஜமௌலி ஈடுபட்டு வருகிறார்.