விசாரணியில் போலீஸ் கேட்ட கேள்விக்கு அல்லு அர்ஜுன் கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் அல்லு அர்ஜுன் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்குக்கு வந்த அல்லு அர்ஜுனை பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள். இந்த கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்த நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் கோமாவில் இருக்கிறார்.
இதை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். பின் கடந்த வாரம் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்து இருந்தது. பின் அவர் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்ற செயல்.
அல்லு அர்ஜுன் சர்ச்சை:
சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலே காவல்துறையினர் அவருக்கு அனுமதி தர மறுத்திருந்தார்கள். இருந்துமே அவர் படம் பார்க்க வந்திருந்தார். அதுவும் கார் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வந்திருந்தார். இந்த கூட்டத்தில் தான் ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்தார். இது வருத்தத்துக்குரிய ஒன்று. நடிகர்கள், பிரபலங்கள் பலருமே அல்லு அர்ஜுனுக்கு தான் ஆதரவு தெரிவித்தார்கள். யாருமே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. விபத்தில் கை,கால் போன மாதிரி அல்லு அர்ஜுனை நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. இதுதான் உங்களுடைய மனிதமா? என்று விமர்சித்து பேசி இருந்தார்.
அல்லு அர்ஜுன் பேட்டி:
பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுன், ஹைதராபாத் திரையரங்கில் நடந்தது எதிர்பாராத சம்பவம். இதில் யாருடைய தவறுமே இல்லை. பொறுப்பில்லாமல் நான் கூட்ட நெரிசலில் ரோடு சோவில் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க போனேன். ஆனால், அங்கு சென்றால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும், சரியான நேரம் வரும்போது போகலாம் என்று வழக்கறிஞர்கள் சொன்னதால் தான் அமைதியாகிவிட்டேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்னுடைய அப்பாவை அனுப்பி இருந்தேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவியின் இழப்பு, குழந்தையின் இழப்பு எவ்வளவு கஷ்டம் வலி என்பது எனக்கும் தெரியும். மனித நேயம் அற்றவன், கெட்டவன், மோசமானவன் என்று என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். இது ரொம்பவே எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்:
இதை அடுத்து கடந்த 22 ஆம் தேதி உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை எரிந்தும், பூந்தொட்டிகளை உடைத்தும் கலவரம் செய்து இருந்தார்கள். இதனால் கலவரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியறையில் போலீஸ் அல்லு அர்ஜுன் இடம் மீண்டும் விசாரணை நடத்தி இருந்தது. சுமார் மூன்று மணி 40 நிமிடங்கள் வரை விசாரணை நடைபெற்று இருந்தது. அந்த விசாரணையில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஐம்பது கேள்விகளுக்கு மேல் அல்லு அர்ஜுனிடம் கேட்டிருந்தார்கள்.
போலீஸ் விசாரணை:
அதில், சிறப்பு காட்சிக்கு நீங்கள் வருவதற்கான அனுமதியை காவல்துறை மறுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா? காவல்துறையினர் உங்களிடம் அது குறித்து பேசினார்களா? காவல்துறை அனுமதி மறுத்த போதும் நீங்கள் சிறப்பு காட்சிக்கு வர முடிவு எடுத்தது ஏன்? திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்த தகவல் உங்களுக்கு தெரிய வந்ததா? தெரிந்துதான் சிறப்பு காட்சிக்கு வருகை தந்தீர்களா? ரசிகர்கள் முன் தோன்றுவதற்கு முறைப்படி காவல்துறை அனுமதி வாங்கினீர்களா? தியேட்டருக்கு வெளியே தடையை மீறி காரில் உலா வந்தது ஏன்? கூட்ட நெரிச்சலில் பெண் ஒருவர் உயிரிழந்த தகவல் உங்களுக்கு எப்போது தெரிய வந்தது? இந்த நிகழ்ச்சிக்கு எத்தனை பவுன்சர்களோடு நீங்கள் சென்றிருந்தீர்கள்? என அடுத்தடுத்து சரா மாரியான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள். போலீசாரின் கேள்விகளுக்கும் அல்லு அர்ஜுன் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.