வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் உதவி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவின் வயநாடு மாவட்டம் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கு இதுவரை 250க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் இந்த இயற்கை பேரழிவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இயற்கை பேரழிவு இந்த முறை ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த வயநாடு நிலச்சரிவு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. NDRF, ராணுவம், உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக அவர்கள் நிலச்சரிவில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சூர்யா குடும்பம் உதவி:
நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் முக்கிய பகுதியில் இருந்து பல மைல் தூரங்கள் வரை இறந்தவர்கள் காணப்படுகிறார்கள். அதனால் வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் கடுமையாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கடினமாக்குகிறது. இதனிடையே கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர்கள் ஜோதிகா, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் ரூபாய் 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளார்கள். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கேரள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
மத்திய அரசின் இழப்பீடு:
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் ஆகியோர் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அதோடு மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அறிவித்திருக்கிறார்.
அரசியல் தலைவர்கள்:
இதை அடுத்து ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசு சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் அதிமுக சார்பில் எடப்பாடி.கே.பழனிசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கே.செல்வபெருந்தகையும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேரளா நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறார்கள்.
சினிமா பிரபலங்கள்:
மேலும், நடிகர் விக்ரம் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 20 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரபல நடிகை நிகிலா விமல் அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து நிவாரணங்களை வழங்கி இருக்கிறார். இப்படி பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது வயநாடு நிலச்சரிவு சம்பந்தமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் பேசும் பொருளாக உள்ளது.