சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் ட்ரைலர் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதிலும் இவருடைய பல படங்கள் அறிவியல் சார்ந்த படங்களாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களாகவும் இருக்கும். மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த வகையில் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய்பீம், ஓ மை டாக் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதன்படி சமீபத்தில் தான் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளிவந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம்மில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார்.