அம்மா மரணித்த போது நான் மட்டும் தான் மருத்துவமனையில் இருந்தேன் – கடந்த ஆண்டு மட்டும் இத்தனை பேரை இழந்துள்ள சுசீந்திரன்.

0
533
Suseenthiran
- Advertisement -

கடந்த ஒரே வருடத்தில் நான் பல பேரை இழந்து விட்டேன் என்று தன்னுடைய திரைப்படத்தின் ஆடியோ விழாவில் சுசீந்திரன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இயக்கத்தில் வெளி வந்த “கென்னடி கிளப்” மற்றும் “சாம்பியன்” ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த இரண்டு படமும் விளையாட்டை மையமாக வைத்த கதை. கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன் ‘ திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீரபாண்டியபுரம். இந்த படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

வீரபாண்டியபுரம் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக நடிகர் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன், நடிகர் ஜெய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கூறியது, கடந்த சில வருடங்களாகவே கொரோனாவால் நம் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருக்கிறோம். இழந்தது மட்டுமில்லாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு சந்தித்திருக்கிறோம்.

விழாவில் இயக்குனர் சுசீந்திரன் கூறியது:

அந்த வகையில் நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். நான் இயக்கிய நான் மகான் அல்ல படத்தில் இருந்து என்னுடன் பத்து வருடங்களாக பயணித்த என்னுடைய மேனேஜர் ஆண்டனி திடீரென்று காலமானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் நிதிஷின் திடீர் மரணமும் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மேனேஜரும் என் நண்பருமான கார்த்தி ஒரு நாள் என்னுடைய வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் மாரடைப்பால் ஒரு நிமிடத்தில் இறந்து விட்டார். இதனால் என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை.

-விளம்பரம்-

கடந்த ஒரு வருடத்தில் நடந்த சோகம்:

அதேபோல் எனக்கு இரண்டு அம்மா இருந்தார்கள். கடந்த பொங்கலை ஒட்டி அதில் ஒருவர் இறந்து விட்டார். கடந்த 12 வருடங்களில் ஒரு வருடம் கூட நான் வேலை செய்யாமல் இருந்ததில்லை. ஆனால், போன வருடம் ஒரு நாள் கூட சூட்டிங் போகவில்லை. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மனரீதியாக நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன். அதிலும் அம்மா மரணித்த போது நான் மட்டும் தான் மருத்துவமனையில் இருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தவுடன் அதை எப்படி அப்பாவிடம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதனால் எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம் தாண்டி சினிமா மீது நான் வைத்துள்ள காதல் என்னை நடமாட வைத்தது.

சினிமா பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியது:

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சூட்டிங் சென்றால் மறந்து விடுவேன். பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் கடந்து தான் நான் என்னுடைய அடுத்த படத்தை இயக்கினேன். இந்தபடம் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் இந்த தருணத்தில் நான் அஜித் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், சில வருடங்களுக்கு முன் நான் அஜித் சாரை அரசியலுக்கு வர சொல்லி இருந்தேன். அது குறித்து கடிதம் கூட எழுதி இருந்தேன். ஆனால், அது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி சுசீந்திரன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement