உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே சினிமாவுலகில் மிரட்டிய 6 இயக்குனர்கள் பற்றிய பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக இருந்து தொழில் நுணுக்கங்களைப் பற்றி தெரிந்த பிறகே இயக்குனராக அறிமுகம் ஆவார்கள். இது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒன்று. ஆனால், ஒரு சில இயக்குனர்கள் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி நேரடியாக இயக்குனராக சினிமா உலகில் சாதித்துக் காட்டிய சில இயக்குனர்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
பாலச்சந்தர்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பாலசந்தர். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். பின் 1965 ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இதில் கதாநாயகனாக நாகேஷ் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை. தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களாக இருக்கும் கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களை இவர் தான் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் படைப்புகளுக்காக ஏகப்பட்ட விருதுகளை வாங்கி இருக்கிறார். ஆனால், இவர் எந்த ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வில்லை.
பாலுமகேந்திரா:
இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகால தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் மூன்றாம் பிறை, மறுபடியும் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். இவரும் உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே இயக்குனராக பல படைப்புகளை கொடுத்திருக்கிறார்.
மணி ரத்தினம்:
தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்தவர் மணிரத்தினம். திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இவர் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது கிடையாது.
கார்த்திக் சுப்புராஜ் :
குறும்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் பீட்சா திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் இறைவி, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இளம்வயதிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது கிடையாது.
லோகேஷ் கனகராஜ்:
தற்போது தமிழ் சினிமா உலகில் வாண்டட் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதனை அடுத்து தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விக்ரம் படமும் ஒட்டுமொத்த மக்களை கவர்ந்து இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் செய்யாத சாதனையை விக்ரம் படம் செய்திருக்கிறது. இதனை அடுத்து இவர் தளபதி 67 என்ற படத்தை இயக்க இருக்கிறார். இவருடைய படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவரும் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இருந்தது இல்லை.
நலன் குமாரசாமி:
விஜய் சேதுபதியின் சூது கவ்வும் திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இவர் காதலும் கடந்து போகும், குட்டி ஸ்டோரி போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஜிகிர்தண்டா, எனக்குள் ஒருவன் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவர் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது கிடையாது.