நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. அப்போது படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர இருப்பதாக தகவல் தெரிந்தவுடன் அங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள். மேலும், இரவு ஒன்பது 9.30 மணிஅளவில் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி, கதாநாயகி ராஷ்மிகா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் அந்த திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர்.
இதை அறிந்த ரசிகர்கள் அல்லு அர்ஜுனை பார்க்க திரையரங்கிற்குள் முந்தி அடித்துக்கொண்டு நுழைந்திருந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்கிற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதி இன்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.
ரசிகை மரணம்:
மேலும், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அவரது பாதுகாப்புக்கு குழுவினர், ஏற்கனவே குழப்பமான சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் கூட்டத்தை பிடித்து தள்ளியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அல்லு அர்ஜூனனின் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்த போதும் திரையரங்கு நிர்வாகம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்றும், தங்களது தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தொகையை கொடுப்பதாக அறிவித்திருந்தார்.
அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு:
மேலும், ரசிகை ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தும், நேற்று அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் போலீஸ் வாகனத்தில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று இருந்தார்கள். அவருடன் சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விதிக்கப்பட்டிருந்தது.
அல்லு அர்ஜுன் கைது:
இதை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் கேட்டு வழக்கறிஞர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுதொடுத்திருந்தார். நேற்று மாலை கிட்டத்தட்ட 2 மணி நேரம் அல்லு அர்ஜுன் ஜாமின் வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருந்தது. அதில் அல்லு சார்பில், அத்துமீறி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுனுடைய வீட்டில் அத்துமீறி நுழைந்து அவருடைய உடை மாற்றுவதற்கும், அடிப்படை உரிமைகளை மறுக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் இறந்தது எதிர்பாராத சம்பவம். அதற்கு அல்லு அர்ஜுன் எப்படி நேரடியாக பொறுப்பேற்க முடியும். அல்லு அர்ஜுன் அங்கு வருவது காவல்துறைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு:
அப்படி இருந்தும் நடந்த உயிரிழப்பிற்கு அல்லு அர்ஜுனை குற்றம் சாட்டி கைது செய்திருப்பது நியாயமற்றது என்று கூறியிருக்கிறார்கள். பின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரது உரிமைகளை பறிக்கக் கூடாது. ஒரு குடிமகனாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவர் உரிமை இருக்கிறது. அவரை கைது செய்து நடத்திய விதம் சரி கிடையாது. அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.