புஷ்பா 2 படத்தால் மாணவர்கள் கெட்டுப் போய் இருக்கிறார்கள் என்று தலைமை ஆசிரியர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா.

இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
புஷ்பா 2 :
அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் கடந்த டிசம்பர் வெளியாகி இருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும், ராஷ்மிகாவின் அழகும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் உலக அளவில் மெகா ஹிட் அடித்து, சுமார் 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். புஷ்பா 2 படத்தில் சிறப்பு காட்சி காண்பதற்கு ஹைதராபாத்தில் இருக்கும் சந்தியா தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு எதுவும் இன்றி வந்திருந்தார்.

அல்லு அர்ஜுன் சர்ச்சை:
அதன் காரணமாக, அங்கு அல்லு அர்ஜுனை காண கூட்டம் அலைமோதியது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் ரசிகை ஒருவர் உயிரிழந்தார். அதோடு, அந்தப் பெண்ணின் மகனும் தற்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அல்லு அர்ஜூனுக்கு எதிராக பலரும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதற்குப்பின் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அரசு பள்ளி ஆசிரியர் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் புஷ்பா 2 படத்தை பார்த்து தான் மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் நடந்த மாநில கல்வி ஆணையத்துடன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியும் நடைபெற்று இருந்தது. அதில் பேசிய ஆசிரியர், அரசு பள்ளி மாணவர்களை கையாள்வது தற்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

புஷ்பா 2 குறித்து சொன்னது:
நான் வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் புஷ்பா 2 படத்தை பார்த்து கெட்டுப் போகிறார்கள். எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆபாச பேச்சு, ஏற்றுக்கொள்ளவே முடியாத ஹேர் ஸ்டைல் என்று அந்த படம் மோசமாக இருக்கிறது. அதை பார்த்து மாணவர்களும் அதே போல் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். ஆபாசமாகவும் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு ஆசிரியராக நான் தோற்றுப் போனது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






